உள்ளூர் செய்திகள்

பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? கல்வி அமைச்சர் மகேஷ் பதில்

சென்னை: கோடை வெயில் காரணமாக, பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்பதற்கு, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பதில் அளித்தார்.அவர் அளித்த பேட்டி:தமிழ், ஆங்கில மொழிகளையும், கணித பாடத்தையும் மாணவர்கள் கற்க, திறன் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். பள்ளிகளை ஜூன், 2ல் திறக்க திட்டமிட்டுள்ளோம்.வெயிலின் தாக்கம் குறித்து, காலநிலை சார்ந்த வல்லுநர்கள் அறிவுரைகள் வழங்குகின்றனர். மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் கருத்து அடிப்படையில், பள்ளிகள் திறப்பை மாற்றம் செய்வதாக இருந்தால் முதல்வர் முடிவெடுப்பார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில், ஒரே மையத்தில் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களில், 167 பேர் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றது குறித்து, சந்தேகம் கிளப்புகின்றனர்.ஆசிரியர் மற்றும் மாணவ - மாணவியரின் திறமையை சந்தேகப்படுவது தவறு. அதே பள்ளி மாணவர்கள் கடந்தாண்டுகளிலும், இந்தாண்டிலும், வெவ்வேறு பாடங்களில், பலர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர் இலவச சேர்க்கைக்கான, ஆர்.டி. இ.,யை பொறுத்தவரை, தமிழக அரசிடம் நீதிமன்றம் முடிவு கேட்டுள்ளது. அதுசார்ந்து, தலைமை செயலர், மத்திய கல்வி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். மத்திய அரசு நமக்குத் தர வேண்டிய, 617 கோடி ரூபாயை இதுவரை தரவில்லை; கடிதத்துக்கும் பதில் இல்லை.இதை பெற, மாநில திட்ட இயக்கு நரும், பள்ளிக்கல்வி செயலரும் டில்லி சென்றுள்ளனர். அவர்கள் தரும் பதில் அடிப்படையில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்