மாதிரி ராக்கெட் ஏவும் திட்டம்; உ.பி.,யில் வெற்றிகர சோதனை
குஷி நகர்: மாணவர்களிடையே விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக, உத்தர பிரதேசத்தில் மாதிரி ராக்கெட் ஏவும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக நடத்தி முடித்துஉள்ளது.உத்தர பிரதேசத்தின் குஷி நகரில், வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மாணவர்களிடையே செயற்கைக்கோள் ஏவும் போட்டி நடக்கஇருக்கிறது. இதன் முன்னோட்டமாக, மாதிரி ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சி குஷி நகரில் நேற்று நடந்தது.இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் சார்பில், மாதிரி ராக்கெட் ஏவும் சோதனைகள் நடத்தப்பட்டன.இதில் கேன்சாட் எனப்படும் குளிர்பான கேன் அளவிலான செயற்கைக்கோள் வைத்து அனுப்பப்பட்டது.நாடு முழுதும் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதிரி ராக்கெட் ஏவுதல் தொடர்பான அனுபவத்தை கற்பிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி அபிஷேக் சிங் கூறுகையில், மாதிரி ராக்கெட் மாலை 5:14 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 1.1 கி.மீ., உயரம் பறந்த உடன், அதிலிருந்து மாணவர்களால் உருவாக்கப்பட்ட கேன்சாட் செயற்கைக்கோள் வெளிவந்தது. அது பாராசூட் வாயிலாக பாதுகாப்பாக தரையிறங்கியது, என்றார்.