உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்க சிறப்பு பயிற்சி திட்டம்

பெங்களூரு: பல நடவடிக்கைகளுக்கு பின்னரும், பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியவில்லை. இதற்கு தீர்வு காணும் நோக்கில், தனியார் பள்ளிகளை போன்று, மாநகராட்சி பள்ளிகளுக்கு புது வடிவம் கொடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.அரசு பள்ளிகள் மட்டுமின்றி, பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளிலும், ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைவதால், அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். மாநகராட்சி பள்ளிகளில் இலவச பாடப்புத்தகம், சீருடை, ஷூ, சாக்ஸ் என, அனைத்தும் கிடைக்கின்றன. ஆனாலும் தனியார் பள்ளிகளிலேயே பெற்றோர், பிள்ளைகளை சேர்க்க விரும்புகின்றனர்.மாநகராட்சி பள்ளிகளில் தரமான கல்வி இருக்காது. அடிப்படை வசதிகளும் இல்லை என்றே இப்போதும் பெற்றோர் கருதுகின்றனர். இதே காரணத்தால் கடன் வாங்கியாவது, பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். லட்சக்கணக்கில் செலவிடுகின்றனர்.இதை உணர்ந்துள்ள பெங்களூரு மாநகராட்சி, தனியார் பள்ளிகளுக்கு நிகராக, மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்த திட்டம் வகுத்துள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி சிறப்பு கமிஷனர் விகாஸ் கிஷோர், நேற்று அளித்த பேட்டி:பெங்களூரு மாநகராட்சி பள்ளிகள் என்றால், ஏழைகளின் பிள்ளைகள் படிக்கும் பள்ளி என்ற கருத்தை போக்க வேண்டும். ஏழைகளின் பிள்ளைகளுடன், செல்வந்தர்களின் பிள்ளைகளையும், பெங்களூரு மாநகராட்சி பள்ளிக்கு ஈர்க்க, நடவடிக்கை எடுத்துள்ளோம்.பிரபலமான தனியார் பள்ளிகளில் மட்டுமே, சங்கீதம், வீணை, பியானோ, நீச்சல், பாடல், பரத நாட்டியம் உட்பட பல்வேறு கலைகள், விளையாட்டுகள் கற்பிக்கப்படுகின்றன. இனி பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளிலும், இத்தகைய கலைகளை இலவசமாக கற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் விரும்பும் துறையில் சாதனை செய்ய ஊக்கமளிக்கப்படும். இதற்கான முழுமையான செலவை, மாநகராட்சி ஏற்கும். மாநகராட்சி மாணவர்கள், வீட்டின் அருகில் உள்ள எந்த பயிற்சி மையங்களில் சேர்ந்து கொள்ளலாம். அதற்கான கட்டணத்தை மாநகராட்சி செலுத்தும்.ஒரு மாணவர், தனக்கு விருப்பமான இரண்டு விஷயங்களை தேர்வு செய்து, பயிற்சி பெற அனுமதி அளிக்கப்படும். இதனால் ஏழை மாணவர்களும், பல துறைகளில் சாதிக்க உதவியாக இருக்கும். இது மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வழி வகுக்கும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்