உள்ளூர் செய்திகள்

கல்வி துறையை சீரழித்தது தான் தி.மு.க.,வின் சாதனை: அன்புமணி

சென்னை : தி.மு.க., ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, தமிழக அரசு கலைக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருவவதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், ஜூன் மாதம் நிறைவடைய வேண்டிய மாணவர் சேர்க்கை, செப்., மாதம் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. அதில், நான்கில் ஒரு பங்கு இடங்கள் நிரம்பாமல் காலியாக கிடக்கின்றன. தனியார் கல்லுாரிகளில் போட்டி போட்டு சேரும் மாணவர்கள், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர விரும்பவில்லை.தமிழகத்தில் மொத்த கல்லுாரிகள் எண்ணிக்கை, 180 ஆக உள்ளது. இவற்றில், 1.26 லட்சம் மாணவ, மாணவியர் சேர்க்கை இடங்கள் உள்ளன. ஜூன் மாதமே சேர்க்கைக்கான காலக்கெடு முடிந்த நிலையில், இடங்கள் நிரம்பாததால், செப்., 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.இதுவரை, 76.2 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதனால், அரசு கல்லுாரிகளில் மீதமுள்ள 30,000 இடங்கள் நிரம்ப வாய்ப்பே இல்லை. தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 25 சதவீத இடங்கள் நிரம்பாமல் இருப்பது, இதுவே முதல்முறை.தி.மு.க., ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, தமிழக அரசு கலைக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதை, புள்ளி விபரங்கள் உறுதி செய்கின்றன. உயர் கல்வி நிறுவனங்களை காப்பாற்ற வேண்டுமானால், தி.மு.க., அரசை அகற்றிவிட்டு, உயர்கல்வி மீது அக்கறை கொண்ட அரசை அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அவரது மற்றொரு அறிக்கையில், 'கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., வழங்கிய 505 தேர்தல் வாக்குறுதிகளில், 364 செயல்பாட்டில் இருக்கின்றன. இன்னும், 40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் உள்ளன.'மொத்தம் 404 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என, மீண்டும் ஒரு பொய்யை முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். மீண்டும் மீண்டும் பொய்களை கூறி மக்களை ஏமாற்ற தி.மு.க., முயல்வது கண்டிக்கத்தக்கது' எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்