நேர்காணல் முடிந்தும் முடிவு இல்லை; சத்துணவு வழங்குவதில் பாதிப்பு
அன்னுார்: சத்துணவு உதவியாளர் பணியிடத்திற்கு நேர்காணல் முடிந்து மூன்றரை மாதம் ஆகியும் முடிவு அறிவிக்கப்படவில்லை.அன்னுார் ஒன்றியத்தில், 75 துவக்க, 16 நடுநிலை, மூன்று உயர்நிலை, ஆறு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 93 சத்துணவு மையங்கள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 6000க்கும் மேற்பட்டோர் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.இதில் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை காலியாக உள்ளன. இதில் 15 பணியிடங்களுக்கு மட்டும் கடந்த ஏப்ரலில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.அதிலும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட ஆம்போதிக்கு ஒரு விண்ணப்பம் கூட பெறப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட செல்லப்பம்பாளையத்திலும் ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை.மற்ற 13 இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. அதன் பிறகு மூன்றரை மாதம் ஆகிவிட்டது. இதுவரை முடிவு அறிவிக்கப்படவில்லை.இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'மொத்தமுள்ள 93ல், பல மையங்களில் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் இல்லை. இதனால் சத்துணவு வழங்குவதில் பாதிப்புஉள்ளது. இந்நிலையில்13 மையங்களுக்காவது உதவியாளர் நியமிக்கப்பட்டால் மாணவ, மாணவியருக்கு சத்துணவு வழங்குவதற்கு உபயோகமாக இருக்கும் என்று ஆர்வமாக எதிர்பார்க்கிறோம்.ஆனால் நேர்காணல் முடிந்து மூன்றரை மாதம் ஆகியும் இதுவரை முடிவு அறிவிக்கவில்லை. விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும். மேலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கும் ஊழியர்கள் நியமிக்க வேண்டும்,' என்றனர்.