முதலீட்டாளர் திட்டங்களில் எவ்வித தலையீடும் இருக்காது: முதல்வர் உறுதி
கோவை: ''தமிழகத்தில் முதலீடு செய்யும் தொழில் துறையினரின் திட்டங்களுக்கு எந்தவித தாமதமும் ஏற்படாது; தலையீடுகளும் இருக்காது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் கோவையில் உள்ள லீ மெரீடியன் ஓட்டலில், 'தமிழகம் வளர்கிறது' என்ற டி.என்., ரைசிங் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடந்தது.இதில், 43,844 கோடி ரூபாய் முதலீட்டில், ஒரு லட்சத்து, 709 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக, 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.பின்னர், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:இந்தியாவிலேயே அதிகமாக, 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை அடைந்து, தமிழகம் சாதனை படைத்துள்ளது. தொழில்துறையை சேர்ந்த யாரை சந்தித்தாலும், தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வாருங்கள் என்று நான் கோரிக்கை விடுத்து வருகிறேன்.தமிழகத்தில் இருக்கும் வாய்ப்புகளை எடுத்துச்சொல்லி, முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறோம். இதுவரை நடத்தப்பட்ட, 17 முதலீட்டாளர்கள் மாநாட்டின் விளைவாக, 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, 11 லட்சத்து, 40,731 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.நேரடியாகவும், மறைமுகமாகவும், 34 லட்சம் பேருக்கும் மேல், வேலைவாய்ப்புகள் பெறுவதை உறுதி செய்துள்ளோம். சிறிய நகரங்களுக்குக் கூட சென்று, 'ஸ்டார்ட் அப்' தமிழ்நாடு வாயிலாக இளைஞர்களை தொழில் துவங்க ஊக்குவிக்கிறோம். அதனால், தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, 12,663 ஆக அதிகரித்துள்ளது.தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன், 62,413 நிறுவனங்கள் இருந்த தமிழகத்தில், இப்போது, 79,185 நிறுவனங்கள் இருக்கின்றன. தொழில் முதலீடுகளை கொண்டு வருவது என்பது சாதாரண விஷயமில்லை. பலத்த போட்டிகளிடையே இந்த முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருகிறோம்.நம்முடைய நிதி நிலைமைக்கு ஏற்ப முறையான சலுகைகள் கொடுத்துத்தான் இந்த முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுகிறோம். தரவரிசையில், நான்கு பிரிவுகளில், தமிழக சாதனையாளர் என்ற அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தில் முதலீடு செய்யும் உங்கள் திட்டங்களுக்கு, எந்தவித தாமதமும் ஏற்படாது; எந்தவித தலையீடுகளும் இருக்காது என்று உறுதியாக கூறுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.