ஆசிரியர்கள் போராட்டம்; புகைப்படம் எடுத்தவர்களின் மொபைல் போன்கள் பறிப்பு
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் நான்காவது நாளாக நேற்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இதை, புகைப்படம் எடுத்த ஆசிரியர்களின் மொபைல் போன்களை போலீசார் பறித்தனர்.'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த 26ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ., வளாகம்; 27ம் தேதி, எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்; நேற்று முன்தினம், சென்னை கலெக்டர் அலுவலகம் போன்றவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.நான்காவது நாளாக நேற்று, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள எழிலகத்தையும், நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தையும், இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட வந்த ஆசிரியர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதேபோல, உழைப்பாளர் சிலை அருகே ஒன்று திரண்ட ஆசிரியர்கள், எழிலகத்தை நோக்கி கோரிக்கை பதாகைகள் ஏந்தியபடி புறப்பட்டனர்; அவர்களின் குழந்தைகளும் வந்திருந்தனர்.போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதை தொடர்ந்து, அவர்கள் காமராஜர் சாலையில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து போலீசார், அவர்களை குண்டுக்கட்டாக துாக்கி கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், சில ஆசிரியர்களுக்கு லேசான காயம், மயக்கம் ஏற்பட்டது. அவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.போலீசாரின் கைது நடவடிக்கையை, புகைப்படம் எடுக்க முயன்ற ஆசிரியர்களின் மொபைல் போன்களை, போலீசார் பறித்ததாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டினர். இடைநிலை ஆசிரியர்கள் ஏராளமானோர், காமராஜர் சாலையில் திடீரென அமர்ந்து போராட்டம் நடத்தியதால், அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் 2 கி.மீட்டர் துாரம் அணிவகுத்து நின்றன. அதன்பின், வாகனங்களை மாற்றுப் பாதையில் போலீசார் திருப்பி விட்டனர்.போலீசை திணறடிக்கும் ஆசிரியர்கள்சென்னையில் கடந்த நான்கு நாட்களாக, வெவ்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எந்த இடத்தில் போராட்டம் நடத்தப் போகிறோம் என்பதை, அவர்கள் முன்கூட்டியே அறிவிப்பதில்லை. ஏனெனில், முன்கூட்டியே அறிவித்தால், போலீசார் அங்கு அதிகளவு குவிக்கப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால், போராட்டம் நடத்துவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், எந்த இடத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கின்றனர். இதனால், போலீசார் திண்டாடுகின்றனர்.