அம்மை நோய் தாக்கப்பட்ட மாணவிக்கு மீண்டும் இன்ஜி., ‘சீட்’
சென்னை: பொறியியல் கவுன்சிலிங்கின்போது அம்மை நோய் இருந்ததால், மருத்துவத் தகுதிச் சான்றிதழ்ப் பெற முடியாத மாணவி, ‘தன்னால் பொறியியல் கல்லூரியில் சேர முடியாது’ என நினைத்து, மாணவர் சேர்க்கை ஆணையை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்திருந்தார். நோயிலிருந்து குணமடைந்ததைத் தொடர்ந்து, அம்மாணவி மீண்டும் அண்ணா பல்கலைக்கழகம் வந்து, தான் ஒப்படைத்த சேர்க்கை ஆணையைப் பெற்றுச் சென்றார். பொறியியல் கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. கவுன்சிலிங்கில் இடத்தை தேர்வு செய்யும் மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழக சுகாதார மையத்தில் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, மருத்துவத் தகுதிச் சான்றிதழைப் பெற்று வருகின்றனர். ஜூலை 29ம் தேதி நடந்த கவுன்சிலிங்கில் நெய்வேலியைச் சேர்ந்த அஞ்சலி என்ற மாணவி ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் காந்தி பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்தார். அஞ்சலி, மருத்துவத் தகுதிச் சான்றிதழ்ப் பெறுவதற்காக அண்ணா பல்கலைக்கழக சுகாதார மையத்திற்குச் சென்ற போது, ‘அவருக்கு அம்மை நோய் இருப்பதால், மருத்துவத் தகுதிச் சான்றிதழ்த் தர முடியாது. வேண்டுமானால் வெளியில் சென்று மருத்துவத் தகுதிச் சான்றிதழ்ப் பெற்றுக் கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ‘தன்னால் பொறியியல் கல்லூரியில் சேரமுடியாது’ என நினைத்த அம்மாணவி, தனக்கு வழங்கப்பட்ட ‘மாணவர் சேர்க்கை ஆணையை’ பல்கலைக்கழகத்தில் திருப்பி ஒப்படைத்தார். மாணவி அஞ்சலி கூறுகையில், “எனது சொந்த ஊரில் உள்ள மருத்துவரிடம் விசாரித்தபோது, அம்மை நோய்க்காக, பொறியியல் படிப்பு படிக்கத் தகுதியில்லை எனக் கூற முடியாது என்றார். அம்மை நோய் குணமடைந்ததைத் தொடர்ந்து, நான் முன் ஒப்படைத்திருந்த மாணவர் சேர்க்கை ஆணையைத் திரும்பப் பெற்று, பொறியியல் படிப்பில் சேர இருக்கிறேன்,” என்றார். இதையடுத்து, அம்மாணவி, பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகாரியிடம் முறைப்படிக் கடிதம் எழுதிக் கொடுத்து, மாணவர் சேர்க்கை ஆணையைத் திரும்பப் பெற்றுச் சென்றார். இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகரிடம் கேட்டபோது, “இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக சுகாதார மையத்தில் மருத்துவத் தகுதிச் சான்றிதழ்ப் பெற வந்துள்ளனர். இதில் மாணவி அஞ்சலி உட்பட மூன்று பேருக்கு அம்மை நோய் இருப்பது தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக சுகாதார மைய மருத்துவ அதிகாரிகள், ‘அம்மை நோய் இருக்கும்போது, மருத்துவப் பரிசோதனை செய்ய முடியாது. நோய் குணமடைந்ததும், உங்கள் ஊரிலேயே மருத்துவத் தகுதிச் சான்றிதழ்ப் பெற்று, அதை வைத்து, பொறியியல் கல்லூரியில் சேரலாம் என கூறியுள்ளனர்,” என்றார். ஜூலை 31ம் தேதி வரை நடந்த கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டவர்களில் எட்டாயிரத்து 919 பேர் வரவில்லை. வந்தவர்களில் 172 பேர் ‘இடம் வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளனர். கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு இடங்களைத் தேர்வு செய்தவர்களில் இதுவரை 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களுக்குக் கிடைத்துள்ள மாணவர் சேர்க்கை ஆணையைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.