உள்ளூர் செய்திகள்

அமெரிக்க பல்கலை கட்டுரையை ‘காப்பி’ அடித்த நெல்லை பேராசிரியர்

திருநெல்வேலி: அமெரிக்க பல்கலை பேராசிரியர் எழுதிய கட்டுரையை தமது கட்டுரை எனக்கூறி, பதவி உயர்வு பெற்ற நெல்லை பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பெர்டியூ பல்கலைக்கழகத்தின் இன்ஜினியரிங் மற்றும் உயிரியியல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பெர்னாட் எங்கல், ஜோகன்சன், சுவாங்சிங், சியாங் ஆகியோர் இணைந்து 1995ம் ஆண்டு தொலைதூரத்தில் இருந்து பூமியை படம் எடுப்பது தொடர்பான ‘ரிமோட் சென்சிங்’ என்ற உலக அளவிலான ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளனர். அந்தக் கட்டுரையை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தகவல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் கிருஷ்ணன் தனது ஆய்வுக்கட்டுரை என நெல்லை பல்கலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தங்களது ஆய்வுக்கட்டுரையை ஒரு வரி கூட மாறாமல் தனது ஆய்வுக்கட்டுரைப் போல கிருஷ்ணன் வெளியிட்டிருப்பது கல்வியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க பல்கலை பேராசிரியர்கள் பெர்னாட் உள்ளிட்டவர்கள் பல்கலையின் வேந்தரான தமிழக கவர்னர் பர்னாலா, பல்கலைக்கழக மானியக்குழு, நெல்லை பல்கலை துணைவேந்தர் சபாபதி மோகன் உள்ளிட்டவர்களுக்குப் புகார் கடிதம் அனுப்பினர். நெல்லை பல்கலையின் தகவல் தொழில்நுட்பத் துறையில் 2005ம் ஆண்டு ‘ரீடர்’ என்ற பொறுப்பில் இருந்த கிருஷ்ணன் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற ரிமோட்சென்சிங் உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை பல்கலைக்கழக மானியக்குழுவிற்குச் சமர்ப்பித்துள்ளார். அந்தக் கட்டுரைகள் அனைத்துமே அவரது சொந்த தயாரிப்பு இல்லை எனவும் இதே போல இணையதளங்களில் இருந்து திருடப்பட்டது எனவும் புகார் கிளம்பியுள்ளது. இதுகுறித்து பல்கலை துணைவேந்தர் சபாபதி மோகனிடம் கேட்டபோது, அமெரிக்க பேராசிரியரின் கட்டுரையைத் தனது பெயரில் வெளியிட்டது தவறு தான். அவரிடம் விசாரணை நடத்திய போது விளக்கம் தந்துள்ளார். இது முந்தைய துணைவேந்தர் காலத்தில் நடந்துள்ளது. பேராசிரியர்கள் கொண்ட கமிட்டி அமைத்து விசாரணை நடத்த உள்ளோம். அவருக்குப் பதிலாக அந்த துறைக்கு வேறு ஒரு நபரை நியமிக்க உள்ளோம். இந்தப் பிரச்னையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், மாணவர்கள் பயப்படத் தேவையில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்