உள்ளூர் செய்திகள்

இன்ஜி., மருத்துவ மாணவர்களுக்கு விளையாட்டு பல்கலையில் புதிய படிப்புகள்

திருநெல்வேலி: தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் விளையாட்டு தொழில்நுட்பம், விளையாட்டு மருத்துவம் ஆகிய புதிய படிப்புகள் அறிமுகப்படுத்த உள்ளது. நெல்லை மாவட்டம் கவுசானல்புரம் கிறிஸ்துஜோதி பள்ளியில் நடந்த ஊரக விளையாட்டுப்போட்டிகளின் பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் திருமலைச்சாமி கூறியதாவது: இந்தியாவில் முதன்முறையாக விளையாட்டுக்காக சென்னையில் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் தற்போது யோகா, மனோதத்துவ விளையாட்டு, விளையாட்டு நிர்வாகம் உள்ளிட்ட துறைகளுடன் செயல்பட்டுவருகிறது. வரும் கல்விஆண்டில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து விளையாட்டு தொழில்நுட்பம் பாடப்பிரிவினை கற்றுத்தர உள்ளோம். பொறியியல் முடித்த மாணவர்கள் இந்த படிப்பில் சேரலாம். இதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து பேராசிரியர்கள் வந்து பாடங்களை கற்றுத்தருவார்கள். மறுஆண்டில் இங்கிருந்தும் மாணவர்கள் ஆஸ்திரேலியா சென்று அங்குள்ள தொழில்நுட்பங்களை கற்றுத்தேர்வார்கள். இதே போல சென்னை எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையுடன் இணைந்து விளையாட்டு மருத்துவ படிப்பையும் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளோம். எம்.பி.பி.எஸ்.,படித்தவர்கள் இந்த படிப்பில் சேரலாம். இந்த படிப்பின் மூலம் விளையாட்டின்போது ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் முறைகள் கற்றுத்தரப்படும். இந்த திட்டத்திற்காக மத்திய அரசின் மனிதவளத்துறை விளையாட்டுபல்கலைக்கழகத்திற்கு நிதி உதவி வழங்குகிறது. பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டினை கட்டாய பாடமாக்கவேண்டும் என வலியுறுத்தி விளையாட்டு பல்கலைக்கழக ஆட்சிக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. விளையாட்டிற்கான பாடத்திட்டத்தையும் உருவாக்கிய பின்னர் அதனை பள்ளிகளில் அமல்படுத்துவது குறித்து தமிழக அரசின் பரிசீலனைக்கு தர உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்