மாணவர்கள் விருப்பத்திற்கு மாறாக அரசு நடவடிக்கை இல்லை: பொன்முடி
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை, ஒருமை பல்கலையாக மாற்றுவது பற்றி, இரு தரப்பினரிடையே கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்களின் கருத்துக்கள் அனைத்தும் ‘மினிட்’டில் இடம்பெற்றுள்ளது. மதுரையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியபின், குழு ஆலோசித்து இறுதி முடிவெடுக்கும். பின், சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்படும். மாணவர்களுக்கு விரோதமாக, தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு ஒருபோதும் செயல்படாது. கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் சுயநிதி இன்ஜி., கல்லூரிகள், அரசுக்கு 50 சதவீத இடங்களை தர மட்டுமே ஒப்புக்கொண்டன. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் 65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2005ல் தமிழகம் முழுவதும் இன்ஜி., கல்லூரிகளில் 43 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருந்தன. தற்போது இந்த இடங்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது. இந்த இடங்களுக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 555 மாணவர்கள் விண்ணப்பித்தனர். ஆகஸ்ட் 7ம் தேதி வரை நடந்து முடிந்த கவுன்சிலிங்கில் 49 ஆயிரத்து 200 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் 32 ஆயிரத்து 60 இடங்கள் காலியாகவுள்ளன. 2006ம் ஆண்டுக்குப்பின், தமிழகத்தில் அண்ணா பல்கலையின் கீழ் ஆறு இன்ஜி., கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முழுவதும் முடிந்துவிட்டன. இதுபோல் கல்லூரிகள் துவக்கப்படுவதால், தனியார் கல்லூரிகள் பணம் வசூலிப்பதை மறைமுகமாக தடுக்க முடியும். மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப முழு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களது கல்லூரியை பல்கலையாக மாற்ற விரும்பவில்லை என்றால், அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்காது. அதே நேரத்தில் பல்கலையாக உயரும் போது ஏற்படும் நன்மைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் போது மட்டுமே இந்த பிரச்னை சுமூகமாக முடியும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.