விடைத்தாள் நகல் பெற, மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம்
சென்னை: பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டல் செய்யவும் விரும்பும் மாணவர்கள், இன்று முதல்(11-05-11), 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கடந்த 9 ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. உயர்கல்வி சேர்க்கைக்கு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படுவதால், மாணவர்களுக்கு வசதியாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாணவர்கள், தாங்கள் எழுதிய விடைத்தாள்களின் நகல்களை வாங்கி பார்த்து கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என கருதினால், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம். அதேபோல், கூட்டலில் மதிப்பெண் விடுபட்டுள்ளதை கண்டுபிடித்தால், அதை சரிசெய்ய, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இன்று முதல் 16ம் தேதி வரை வழங்கப்படுகின்றன. தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்திற்கு தலா 550 ரூபாயும், இதர பாடங்களுக்கு தலா 275 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், மறு கூட்டலுக்கென தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை. விடைத்தாள் நகல் பெற்ற பின், விரும்பினால் மறு கூட்டலுக்கோ அல்லது மறு மதிப்பீட்டிற்கோ விண்ணப்பிக்கலாம். மறு கூட்டலை பொறுத்தவரை, மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியியல் பாடங்களுக்கு தலா 305 ரூபாயும், இதர பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.