கணித பாடத்திற்கும் பிராக்டிகல் மதிப்பெண்: முதுநிலை ஆசிரியர்கள்
பிளஸ்2 கணித பாடத்தில் ஆண்டுக்காண்டு தேர்ச்சி சதவீதம் குறைவதாக ஆசிரியர்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டு 4 ஆயிரம் பேருக்கு மேல் நூறு சதவீத மதிப்பெண் பெற்ற நிலையில், இந்தாண்டு 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரே பெற்றனர். கணிதத்தில் தோல்வி அடைவோர் முந்தைய காலங்களில் 10 சதவீதம் என்பது, தற்போது 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் கணித பாடத்தை எளிமையாக்க வேண்டும் என்ற கருத்து உருவாகியுள்ளது. பாடத்தை எளிமையாக்குவதைவிட கணித பாடத்திலும் 50 மதிப்பெண்ணுக்கு பிராக்டிக்கல் தேர்வு வேண்டும் என கருதுகின்றனர். மாணவர்கள் நலன்கருதி, மத்திய கலைத் திட்டப்படி, கணிதத்தை எளிமையாக கற்க, அறிவியல், புள்ளியியல், புவியியல் பாடங்களுக்கு உள்ளது போல பிராக்டிக்கல் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாமக்கல்லில் கூடிய தமிழ்நாடு கணித பாட முதுநிலை ஆசிரியர்கள் கழகத்தினர் இதை வலியுறுத்தினர். இதற்கான மாநில கூட்டம் மாநில தலைவர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. இணை செயலாளர் எம்.வரதராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் குணசேகரன், அரங்கண்ணல், மதுரை மாவட்ட தலைவர் தமிழ்க்குமரன், செயலாளர் என்.ஆர்.ராஜா உட்பட கணித ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், மேல்நிலை கணித பாடங்களை தற்போது கல்லூரி ஆசிரியர்களே வடிவமைத்து வருகின்றனர். இதை முதுநிலை ஆசிரியர்களே வடிவமைக்க முழுஉரிமை தரவேண்டும். அதேபோல பொதுத் தேர்வுகளின் போது வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பு (&'கீ&' ஆன்சர்) தயாரிக்கவும் வாய்ப்பு தரவேண்டும். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற அரசை பாராட்டுவது, கணித பாட ஆசிரியர்கள் மாநில மாநாட்டை தென் மாவட்டத்தில் நடத்துவது, அதில் கல்வி அமைச்சரை பங்கேற்க செய்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.