தனியார் பள்ளிகளுக்கான நில அளவை குறைக்க கோரிக்கை
சென்னை: "நர்சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச நிலப்பரப்பு விதிமுறையை ரத்து செய்ய வேண்டும்" என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.இதன் தலைவர் கிறிஸ்துதாஸ், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு குழு, தனியார் பள்ளிகள் இயங்குவதற்கு, குறைந்தபட்ச நில பரப்பளவை நிர்ணயித்தது. மாநகராட்சி பகுதிகளாக இருந்தால், ஆறு கிரவுண்டு நிலம், மாவட்ட தலைநகராக இருந்தால் எட்டு கிரவுண்டு நிலம், நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளாக இருந்தால் 10 கிரவுண்டு நிலம், நகரப் பகுதிகளில் ஒரு ஏக்கர், கிராமப்புற பகுதிகளாக இருந்தால் மூன்று ஏக்கர் இருக்க வேண்டும் என அந்தக் குழு நிர்ணயித்தது. இதற்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட பள்ளிகளுக்கு, 2008 வரை கால அவகாசம் கொடுத்து அறிக்கையை தாக்கல் செய்தது. நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதால், சிட்டிபாபு குழு நிர்ணயித்த அளவில் நிலங்களை வாங்க முடியாமல் 500 பள்ளிகள் தவித்து வருகின்றன. நிலப் பிரச்னையை காரணம் காட்டி, இப்பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கவும் அதிகாரிகள் மறுக்கின்றனர். இந்நிலையில் 500 பள்ளிகளுக்கு நீட்டித்து அனுமதிக்கப்பட்ட கால அவகாசம், இம்மாதத்துடன் முடிகிறது. அரசு கல்லூரிகள், மருத்துவமனைகள், நிர்ணயிக்கப்பட்ட நிலப்பரப்பை விட, குறைவான நிலப்பரப்பில் இயங்கி வரும் நிலையில், தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நிலப்பரப்பை வலியுறுத்துவது சரியல்ல. எனவே, குறைந்தபட்ச நிலப்பரப்பு விதிமுறையை ரத்துசெய்ய வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு குழந்தைகளை மாற்ற அதிகமான பெற்றோர் விரும்புகின்றனர். இதை உணர்ந்து, அனைத்துப் பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பல நர்சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. வாடகை கட்டடத்தில் பள்ளிகள் இயங்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் குத்தகை உரிமம் பெற வேண்டும் என துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த காலத்தில் யாரும் அத்தனை ஆண்டுகளுக்கு குத்தகை உரிமம் தருவதில்லை. ஒருசில ஆண்டுகளுக்கு மட்டுமே தருகின்றனர். எனவே, குத்தகை ஒப்பந்தத்திற்கான கால அளவை 30 ஆண்டில் இருந்து, மூன்று ஆண்டுகளாக குறைக்க வேண்டும். இவ்வாறு கிறிஸ்துதாஸ் கூறினார்.