உள்ளூர் செய்திகள்

முதல் தலைமுறை பட்டதாரிக்கான உதவித் தொகையில் குழப்பம்

குடும்பத்தில், முதல் பட்டதாரிக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை, புதிய அரசு செயல்படுத்துமா என்ற சந்தேகம் பெற்றோர், மாணவர்களிடத்தில் எழுந்துள்ளது. தி.மு.க., அரசு, குடும்பத்தில் பெற்றோர் பட்டப்படிப்பு முடிக்காவிடில், அவர்களது முதல் குழந்தை, பட்டம் பெற சென்றால், அதற்கான கல்வி செலவை அரசே ஏற்கும் என அறிவித்தது. இதில், பயன்பெற, உதவித் தொகை பெற விரும்பும் மாணவரின் தாய், தந்தை, அவர்களது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் பட்டம் பெற்றிருக்கக் கூடாது. இதற்கு, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. இம்மாணவருக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும். இத்திட்டத்தால், கடந்த கல்வியாண்டில் ஏராளமான மாணவர்கள் பயனடைந்தனர். குழப்பம்: ஆனால், இக்கல்வி ஆண்டு துவக்கத்தில் பட்டப்படிப்பில் சேர அனைத்து தரப்பு மாணவர்களும் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். அதே நேரம், குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களிடம், இக்கல்வி ஆண்டு புதிய அரசு அமைந்துள்ளதால், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், "முதல் பட்டதாரிக்கான விண்ணப்பத்தை பெற்று, அதற்கான சான்றை பெற, வருவாய்த் துறையிடம் முயற்சிக்கிறோம். அவர்களோ, "புதிய அரசு வந்துள்ளதால், இத்திட்டம் தொடருமா" என, தெரியாது. அரசிடமிருந்து அறிவிப்பு வரும் வரை, சான்று வழங்க முடியாது என்கின்றனர். இதனால், பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கிறேன்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்