சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த கல்வியாளர்கள் வலியுறுத்தல்
பொதுக் கல்விக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, முன்னாள் பேராசிரியர் மார்க்ஸ், தமிழக தமிழாசிரியர் குழு முன்னாள் தலைவர் பச்சையப்பன், மதுரை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜு உள்ளிட்ட கல்வியாளர்கள், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: சமச்சீர் கல்வி திட்டம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இத்திட்டத்தை திடீரென நிறுத்தி வைத்து, தமிழக அரசு அறிவித்திருப்பது, கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, செம்மொழிப் பாடல் உள்ளிட்ட சில பகுதிகளை பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்தார் என்பதற்காக, ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தையே நிறுத்தி வைத்திருப்பது சரியான செயல் இல்லை. சம்பந்தப்பட்ட பகுதிகளை மட்டும் நீக்கிவிட்டு, திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தியிருக்கலாம். "பாடத்திட்டத்தின் தரம் சரியாக இல்லை; தரத்தை உயர்த்தியபின் திட்டம் அமல்படுத்தப்படும்" என்று கூறியுள்ள அரசு, எந்த வகையில் பாடத்திட்டம் தரமாக இல்லை என்பதை விளக்கவில்லை. பொத்தாம் பொதுவாக, சரியில்லை என்று கூறி, திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதால், மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கும் முடிவை, தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சமச்சீர் கல்வி திட்டத்தை, இந்த ஆண்டு செயல்படுத்தக்கோரி, மாநிலம் தழுவிய அளவில் பிரசாரம் செய்யப்படும். இந்தியாவில், எந்த மாநிலத்திலும் இல்லாத அரசியல் நிலைமை, தமிழகத்தில் மட்டும் தான் இருக்கிறது. இரு முக்கிய கட்சிகளின் தலைவர்கள், ஒருவரை ஒருவர் எதிரியாக பார்க்கின்ற நிலை இங்கே உள்ளது. இதனால் தான், ஒருவர் கொண்டுவந்த திட்டத்தை, மற்றொருவர் எதிர்க்கிறார்; ரத்து செய்கிறார். மற்ற மாநிலங்களில், ஆளுங்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒற்றுமையாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதுபோன்ற நிலை இங்கே அமையாதது துரதிருஷ்டம். இவ்வாறு அவர்கள் கூறினர்.