உள்ளூர் செய்திகள்

‘படிப்பறிவு மட்டும் போதாது; தொடர்பியல் திறனும் அவசியம்’

கோவை: “மாணவர்களுக்கு படிப்பறிவு மட்டும் போதாது; தொடர்பியல் திறனையும் வளர்த்துக் கொள்வதும் அவசியம்,” என, போர்டெக் டெக்னாலஜிஸ் நிறுவன வர்த்தக பிரிவு தலைவர் வெங்கடேசன் பேசினார். கோவை ஜி.ஆர்.டி., அறிவியல் கல்லூரியின் உயிர்த்தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் ‘முதுநிலை பட்டதாரிகள் எதிர்நோக்கியுள்ள வேலை வாய்ப்புகளுக்கான வழி வகைகள்’, குறித்த கருத்தரங்கு நடந்தது. இதில், அமெரிக்காவில் உள்ள போர்டெக் டெக்னாலஜிஸ் நிறுவன வர்த்தக பிரிவு தலைவர் வெங்கடேசன் பேசியதாவது:வளாகத்தேர்வு நடத்தவரும் நிறுவனங்களைப் பற்றி, கல்லூரி நிர்வாகம் நன்றாக தெரிந்து கொள்வது அவசியம். அதுபோல் நேர்காணல் தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்கள், தங்களது துறை ரீதியான 10 நிறுவனங்களையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். இன்றைய சூழலில் வேலைக்கான போட்டிகள் அதிகரித்து விட்டன. படிப்பறிவு இருந்தால் மட்டும் போதாது. தொடர்பியல் திறனை வளர்த்துக்கொள்வதும் மிக அவசியம். பல்கலை அளவில் ‘ரேங்க்’ பெற்ற மாணவர்கள் கூட, சில நேரங்களில் வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்படுவதில்லை. ஆனால், சிறப்பாக படிக்காத மாணவர்கள் கூட தேர்ச்சி பெற்று விடுவதுண்டு. இது தேர்வு செய்ய வந்துள்ள நிறுவனம் மற்றும் தேர்வாளர்களைப் பொறுத்தும் அமையும். மற்றவர்களின்  ‘பயோ டேட்டா’வை பார்த்து, அப்படியே காப்பி அடிக்க கூடாது. ஒவ்வொரு பயோ டேட்டாவும் வித்தியாசமாக இருக்க வேண்டும். தேர்வாளர்கள், ‘இந்த நிறுவனத்தில் எதற்காக பணியில் சேருகிறீர்கள், பொழுது போக்கு என்னென்ன’ என்று கேட்கக்கூடும். இந்த கேள்விகளை வைத்துக் கூட, நேர்காணலுக்கு வந்தவர்களின் தகுதியை நிர்ணயிக்க கூடும். நேர்காணலுக்கு செல்லும் மாணவர்கள், அந்த நிறுவனத்தைப் பற்றிய விபரங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம். இவ்வாறு வெங்கடேசன் பேசினார். தொடர்ந்து திருப்பூர் பி.ஜி.சி., தொழிற்சாலையின் முதன்மை ஆபரேடிங் அதிகாரி நவீன் சந்தர் பேசினார். இக்கருத்தரங்கில் மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்