பி.எஸ்.ஜி., கல்லூரி, அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் ‘ஸ்டிரைக்’
கோவை: பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள், அதே பிரிவில் படிக்கும் மாணவர்கள் மற்றும் கோவை அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் ஆகஸ்ட் 20ம் தேதி ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டனர். பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்து, ஒருமை தனியார் பல்கலையாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவ, மாணவியர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்கள், உயர்கல்வித்துறை மற்றும் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் விலைவாசி உயர்வு, அரசுத்துறைகளை தனியார் மயமாக்குதல் உட்பட பல்வேறு பிரச்னைகளைக் கண்டித்து பொதுத்துறை நிறுவனங்கள் நடத்திய ஸ்டிரைக்கிற்கு ஆதரவு தெரிவித்தும், பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை ஒருமை பல்கலையாக மாற்றுவதை கண்டித்தும் அரசு உதவி பெறும் பிரிவுகளில் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி கேட் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின், பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறுகையில், “வரும் 23ம் தேதி மாலை 5க்கு கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்பர்,” என்றனர். கோவை அரசு கலைக்கல்லூரி: தேசிய அளவில் நடந்த பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, கோவை அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்கள் அனைவரும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், கல்லூரியில் வகுப்புகள் நடக்கவில்லை.