உள்ளூர் செய்திகள்

வறுமையால் உயர்கல்வி பயில வழியின்றி தவிக்கும் மாணவர்

கட்டட வேலை செய்து, குடும்பத்தைக் காப்பாற்றிய மாணவர், பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்றும், வறுமைக் காரணமாக, உயர்கல்விக்கு வழியின்றி தவிக்கிறார். தர்மபுரி மாவட்டம், ஏமனூர் கிராமத்தில், பெரும்பாலோர் மீன்பிடி தொழிலை நம்பியுள்ளனர். கிராமத்தில் உள்ள மாணவர்கள் படிக்க, பரிசல் மூலம் அணையை கடந்து, மறு கரையில் உள்ள சேலம் மாவட்டம், கொளத்தூருக்குத்தான் வர வேண்டும். ஏமனூரைச் சேர்ந்த ராசன் - சின்னம்மாள் தம்பதியரின் மகன் சத்யராஜ். தினமும் பரிசலில் கொளத்தூர் வர முடியாது என்பதால், கொளத்தூர் அடுத்த சத்யாநகரில் ஹாஸ்டலில் தங்கி, அரசு பள்ளியில் படித்தார். பிளஸ் 2 தேர்வில் சத்யராஜ், 1,052 மதிப்பெண் பெற்றுள்ளார். இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள இவர், சீட் கிடைத்தாலும், வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாத நிலையில் உள்ளார். மாணவர் சத்யராஜ் கூறியதாவது: என் தந்தைக்கு, உடல்நலம் சரியில்லை. தாய், அணையில் மீன்பிடிக்கும் கூலி வேலைக்கு செல்கிறார். 10ம் வகுப்பில், 452 மதிப்பெண் பெற்றும், வசதி இல்லாததால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. குடும்பத்தை காப்பாற்ற, ஒரு ஆண்டாக, கட்டட வேலைக்கு சென்றேன். அதன் பின், ஹாஸ்டல் வசதி கிடைத்ததால், ஓராண்டு கழித்து, கொளத்தூர் நிர்மலா பள்ளியில், பிளஸ் 1 சேர்ந்தேன். கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள நான், சீட் கிடைத்தாலும் கட்டணம் செலுத்தும் அளவுக்கு வசதியில்லை என்பதால், உயர்கல்வியை தொடர முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. என் வறுமையை போக்க, என்னால் உழைத்து சம்பாதிக்க முடியும். ஆனால், உயர்கல்வி கிடைக்க, அரசு அல்லது தொண்டு உள்ளம் படைத்தவர்கள் உதவினால் மட்டுமே முடியும். எனக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்தால், என்னை போல கஷ்டப்படும் பலரையும் படிக்க வைக்க, என்னால் இயன்ற உதவியை நிச்சயம் செய்வேன். இவ்வாறு சத்யராஜ் கூறினார். உயர்கல்விக்கு வழியின்றி தவிக்கும் மாணவருக்கு உதவ நினைப்பவர்கள், 89404 55506 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்