உள்ளூர் செய்திகள்

சுயநிதி பொறியியல் கல்லூரி கல்விக் கட்டணத்தில் மாற்றமில்லை

சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி பல சுயநிதி பொறியியல் கல்லூரிகள் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, கல்விக் கட்டணக் குழு, ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில், கடந்த ஆண்டு வசூலித்த கல்விக் கட்டணத்தையே இந்த ஆண்டும் தொடரலாம் என்று அறிவித்துள்ளது. கல்விக் கட்டணக் குழுவின் தலைவராக உள்ள ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி. பாலசுப்ரமணியன் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஆண்டு கல்விக் கட்டணத்தையே நடப்புக் கல்வி ஆண்டுக்கும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் வசூலிக்க வேண்டும் என்று கூறினார். இதன்படி, இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளான பி.இ., பி.டெக்., பி.ஆர்க். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் இருந்து கல்விக் கட்டணமாக ரூ.32,500ம், தேசிய அங்கீகாரம் பெற்ற (என்.பி.ஏ.) பொறியியல் படிப்புகளுக்கு ரூ.40,000மும் வசூலிக்கப்பட வேண்டும். இதேப் படிப்புகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கும், தேசிய அங்கீகாரம் பெற்ற மற்றும் பெறாத படிப்புகளுக்கும் கடந்த ஆண்டைய கட்டணமான 62,500 ரூபாயே தொடரும் என்றும் என்.வி. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டுதான், சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. இதையடுத்து வரும் கல்வி ஆண்டில் கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி. பாலசுப்ரமணியம் தலைமையிலான 5 பேர் குழு அமைக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 464 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக உரிய படிவத்தில் கருத்துருக்களை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டது. இதில் வெறும் 191 கல்லூரிகள் மட்டுமே கருத்துருக்களை அனுப்பின. அதிலும் 76 கல்லூரிகள் மட்டுமே முறையான தணிக்கை செய்யப்பட்ட நகல்களை அனுப்பியிருந்தன. இதோடு, கல்லூரிகளின் வரவு செலவுகளை ஆய்வு செய்ததில், இப்போதுள்ள கட்டணத்தை வசூலிக்கும் போதே அவற்றுக்கு ஏற்படும் செலவை விட வரவு கூடுதலாக இருப்பது தெரிய வந்தது. எனவே, இந்த ஆண்டு கட்டணத்தை மாற்றி அமைக்க எந்த தேவையும் இல்லை என முடிவு செய்யப்பட்டது. இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விடுத்து, கூடுதல் கட்டணத்தை பொறியியல் கல்லூரிகள் வசூலித்தால், அது குறித்து புகார் தெரிவிக்கும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் குறித்து பெற்றோரும், நீதிபதி என்.வி. பாலசுப்ரமணியன் குழு அலுவலகம், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் குடியிருப்பு, கோட்டூர்புரம், சென்னை என்ற முகவரியில் உரிய ஆதாரங்களுன் புகார் தெரிவிக்கலாம். மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் புகார் குறித்த விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்