மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.சி.ஐ., குழு ஆய்வு
மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியில் நீக்கப்பட்ட சிறப்பு பாடப்பிரிவுகளுக்கு மீண்டும் அங்கீகாரம் அளிப்பது குறித்து, இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,) குழு ஆய்வு நடத்தியது. இக்கல்லூரியில் இதய இயல், நரம்பியல் பிரிவுகளை சமீபத்தில் எந்த முன்னறிவிப்பும் இன்றி எம்.சி.ஐ., நீக்கியது. பாடம் கற்றுத்தரும் பேராசிரியர்களில் சிலர் எம்.சி.ஐ.,யின் அங்கீகாரம் பெறாததே காரணம் என்று கூறப்பட்டது. ஏற்கனவே குற்றவழக்குத் தொடர்புடைய உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் பாடப்பிரிவு மற்றும் சமூக மருத்துவப் பிரிவும் நீக்கப்பட்ட நிலையில், இந்த நீக்கம் டாக்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கிடையே கல்லூரியில் தேர்வு நடந்து வருகிறது. இச்சமயத்தில் கட்டாயம் ஆய்வு செய்து, இதய இயல் மற்றும் நரம்பியல் பிரிவுக்கு அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, எம்.சி.ஐ., குழுவைச் சேர்ந்த பனாரஸ் இந்து பல்கலை பேராசிரியர்கள் குப்தா, மகேந்திரா தத்தா பிரகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.