உள்ளூர் செய்திகள்

அரசு இசை, சிற்ப கல்லூரிகளில் பயிற்சி வகுப்பு

இசை மற்றும் சிற்பக் கல்லூரிகளில், குறுகிய கால சான்றிதழ் பயிற்சி துவக்குவது குறித்து, அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சென்னையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகத்தில், கலை பண்பாட்டுத் துறை ஆய்வுக் கூட்டம், நேற்று நடந்தது. அமைச்சர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கலை பண்பாட்டுத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அரசு இசைக் கல்லூரிகள், இசைப் பள்ளிகள், கவின் கலைக் கல்லூரிகள், கட்டட மற்றும் சிற்ப கலைக் கல்லூரி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம், தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு, நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகள், அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, திருவையாறு ஆகிய ஊர்களில், அரசு இசைக் கல்லூரி உள்ளது. இங்கு 3 ஆண்டு பட்டப் படிப்பாக, குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல், பரதம், நாட்டுப்புறக் கலை கற்பிக்கப்படுகிறது. ஓராண்டு ஆசிரியர் பயிற்சி வகுப்பும் நடைபெறுகிறது. சென்னை, கும்பகோணம் பகுதியில் உள்ள, அரசு கவின் கலைக் கல்லூரிகளில், நான்காண்டு பி.எப்.ஏ., படிப்பு, 2 ஆண்டு எம்.எப்.ஏ., படிப்பு உள்ளது. மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில், 4 ஆண்டு பட்டப்படிப்பு உள்ளது. இங்கு கோவில் கட்டடக்கலை, மரபு சிற்பம், கல் சிற்பம், சுதை சிற்பம், மர சிற்பம், உலோக சிற்பம், மரபு ஓவியம் மற்றும் வண்ணம் ஆகியப் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இக்கல்லூரிகளில் சுய நிதி படிப்புகளாக, 6 மாத பட்டயப் பயிற்சி வகுப்புகளை துவக்குவது, அரசு சிற்பக் கல்லூரி மாணவர்கள் படிப்பு முடிந்ததும், இந்து சமய அறநிலையத் துறை கீழ் உள்ள கோவில் திருப்பணிகளுக்கு பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டம் முடிந்ததும், அரசு அருங்காட்சியகத் துறை ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் குறித்த விவரங்களை தெரிவிக்க, அமைச்சர் மறுத்து விட்டார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்