உள்ளூர் செய்திகள்

ஐ.ஏ.எஸ்.: உணவுக் கட்டண நிதி உதவி உயர்வு

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்காகப் பயிற்சி அளிக்க, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபின மாணவர்களுக்கென ஒரு பயிற்சி மையமும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கெனத் தனியாக, ஒரு பயிற்சி மையமும் இயங்கி வந்தன. இந்த இரண்டு மையங்களும் இணைக்கப்பட்டு, அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம்" என பெயரிடப்பட்டது. இதில் சேரும் மாணவர்களுக்கான தங்குமிடம், உணவு, நூலகம், கணினி வசதிகளுடன், இம்மையம் பயிற்சி அளித்து வருகிறது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யு.பி.எஸ்.சி.,), ஆண்டுதோறும் நடத்தப்படும், சிவில் சர்வீஸ் ஆரம்பகட்ட தேர்வு எழுதும் 300 பயிற்சியாளர்களுக்கும், முதன்மைத் தேர்வு எழுதும் 200 பயிற்சியாளர்களுக்கும், இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. டில்லியில் நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள, இவர்கள் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில், சலுகைக் கட்டணத்தில் தங்கவும் வசதிகள் செய்து தரப்படுகின்றன. இப்பயிற்சி மையத்தில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு, மாதாந்திர உணவுக் கட்டணமாக, ஒரு மாணவருக்கு 800 ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில், மாதாந்திர உணவுக் கட்டணத்தை, 1,200 ரூபாயாக உயர்த்தி வழங்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என, தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்