பி.எட்., கல்வித் தகுதியை ஆன்-லைனில் பதியலாம்
பி.எட்., முடித்தோர், தங்கள் வேலைவாய்ப்பு பதிவை, ஆன்-லைனில் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பி.எட்., முடித்தோர், தாங்கள் பயின்ற கல்லூரியில் மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளில் அல்லது தாங்கள் சார்ந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில், தங்கள் வேலைவாய்ப்புப் பதிவை செய்து கொள்ளலாம். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தோர், தங்கள் பட்டப் படிப்புடனும், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தோர், தமது முதுநிலை பட்டப் படிப்புடனும், பி.எட்., கல்வித் தகுதியை பதிவு செய்து கொள்ளலாம். சென்னை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஏற்கனவே தங்கள் முதுநிலை பட்டப்படிப்பை பதிவு செய்துள்ளோர், ஆன்-லைனில் கூடுதலாக பி.எட்., பதிவு செய்து கொள்ளலாம். வெளி மாவட்டத்தைச் சேர்ந்தோர், தங்கள் பி.எட்., கல்வித் தகுதியை பதிவு செய்ய, சென்னை வருவதைத் தவிர்க்க, இவ்வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.