மன்மோகன்சிங், சோனியா, கருணாநிதிக்கு கவுரவ டாக்டர் பட்டம்
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, யுனிடோ தலைமை இயக்குனர் கண்டே உம்கலா ஆகிய 4 பேருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான பர்னாலா டாக்டர் பட்டங்களை வழங்கினார். இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பணிக்காக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஜனநாயக மரபு மற்றும் மதநல்லிணக்கத்துக்கு ஆற்றிய சேவைக்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்திக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. தமிழ்மொழி, தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும், சமூக நீதிக்கும் பாடுபட்டதற்காக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. வறுமை ஒழிப்புக்கு பாடுபட்டதற்காக கண்டே உம்கலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் நடந்த விழாவுக்கு கவர்னர் பர்னாலா தலைமை தாங்கினார். சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். சென்னை பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி வாழ்த்திப் பேசினார்.