உள்ளூர் செய்திகள்

தமிழக பொறியியல் கல்லூரிகளால் நாசமாகும் தொழில்நுட்பக் கல்வி

தொழில்நுட்பக் கல்வியை தமிழகத்தில் உருவாகும் பல தனியார் பொறியியல் கல்லூரிகள் தான் நாசமாக்கி வருகின்றன என்று ஐஐடி-கான்பூர் கல்வி நிறுவனத்தின் தலைவர் அனந்த கிருஷ்ணன் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுநிலை படிப்புகளுக்கான முன்னாள் தலைவர் பி.சி. சந்திரசேகரனின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அனந்த கிருஷ்ணன் இவ்வாறு கூறினார். விழாவில் அனந்த கிருஷ்ணன் பேசுகையில் தமிழக பொறியியல் கல்லூரிகளை அதிகமாக விமர்சித்தார். தமிழகத்தில் உருவாகும் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் பொறியியல் பாடத்தை வெறும் பாடமாகவே கற்பிக்கின்றன. அவற்றைத் தாண்டி மாணவர்களை சிந்திக்க வைக்கவில்லை. தொழில்நுட்பக் கல்வியையே இம்முறை அழித்து நாசமாக்கிவிட்டது என்று அவர் குற்றம்சாட்டினார். பொறியியலை ஒரு படிப்பாக மட்டுமே நடத்தி வரும் பொறியியல் கல்லூரிகளால் பெருகி வரும் கோச்சிங் சென்டர்களையும் அவர் சாடினார். பொறியியல் படிப்புகளில் தேர்ச்சி பெற அல்லது அதிக மதிப்பெண்கள் பெற நாங்கள் பயிற்சி அளிக்கிறோம். எங்களிடம் வாருங்கள் என்று பயிற்சி நிலையங்கள் அளிக்கும் விளம்பரங்களை பார்த்தபோது எனக்கு மிகவும் கோபம் வந்தது என்று கூறினார். தற்போதைய மாணவர்கள், பொறியியல் பாடத்தை படிப்பதோடு நிறுத்திவிடாமல் அதில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை கொண்டு வர ஊக்கப்படுத்த வேண்டும். வெறும் படிப்போடு படிப்பை நிறுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள ஏதேனும் சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் என்றார் அவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்