உள்ளூர் செய்திகள்

தூதரகங்கள் மூலமாக அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேருங்கள்

இந்திய கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து பணியாற்றுவது தொடர்பாக அமெரிக்க வர்த்தகத் துறை உதவி செயலாளரும், அமெரிக்க வெளிநாட்டு வர்த்தக மைய தலைமை இயக்குநருமான சுரேஷ்குமார் தலைமையில் 21 அமெரிக்க கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அக்டோபர் 15ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளனர். அமெரிக்க கல்வி குழுவினரின் தலைவராக சென்னை வந்துள்ள சுரேஷ்குமாரின் பூர்வீகம் சென்னையாகும். அவர் அமெரிக்க துணை தூதரகத்தில் பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, 21ம் நூற்றாண்டில் இந்தியாவுடனான அமெரிக்க உறவு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று அதிபர் ஒபாமாவே கூறியிருக்கிறார். கல்வி, மின்சாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. கல்வித்துறையில் பாடத்திட்டத்தை சீரமைப்பதுடன் ஆசிரியர்களுக்கும் போதிய பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. கல்வியில் இணைந்து செயல்படுவது என்று சொல்லும் போது வெறும் ஆசிரியர், மாணவர்கள் பரிமாற்றத்துடன் நின்றுவிடாமல், ஆய்வக வசதிகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும். அமெரிக்காவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 6 லட்சத்திற்கும் அதிகமான மாணாக்கர்கள் படித்து வருகிறார்கள். இதில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதமாகும். இதேப்போல இந்தியாவுக்கு வரும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலகில் உள்ள மிகச் சிறந்த 20 பல்கலைக்கழகஙகளின் பட்டியலில் 14 பல்கலைக்கழகங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. அமெரிக்காவில் வழங்கப்படும் உயர் தரமான கல்விதான் இதற்கு எல்லாம் காரணம். பாடத்திட்டம், கல்விக்கட்டணம் போன்ற அம்சங்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழங்களே நிர்ணயம் செய்து கொள்கின்றன. அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்கள் புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம். அமெரிக்க தூதரகம் அல்லது தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி ஆலோசனை அமைப்புகள் மூலமாக கல்வி நிலையங்களில் சேர வேண்டும். முன்பின் தெரியாத புரோக்கர்கள் மூலமாக கல்லூரிகளில் சேர்வதற்காக அமெரிக்காவிற்கு வரக் கூடாது என்று அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்