உள்ளூர் செய்திகள்

பொறியியற் கல்லூரி ஆசிரியர் தரம் மேம்படுத்தப்பட வேண்டும்

மதுரை: "பொறியியற் கல்லூரி ஆசிரியர்களின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும்" என திட்டக்குழு உறுப்பினர் பாலகுருசாமி பேசினார். மதுரையில் நாஸ்காம் அமைப்பின் சார்பில், வேலைவாய்ப்பு திறன் கருத்தரங்கு நடந்தது. மாநில திட்டக்குழு உறுப்பினர் பாலகுருசாமி பேசியதாவது: பொறியியல் மாணவர்களிடமும் தொழில்நுட்ப அறிவு குறைவாகவே உள்ளது. உயர்கல்வியில் மாணவர்கள் திறனை வளர்ப்பதுடன், எப்படி வாழ்வது என்பதையும் கற்பிக்க வேண்டும். மாணவர்கள் படித்த உடன் வேலை, கைநிறைய சம்பளம், வெளிநாட்டு பயணம் என எதிர்பார்க்கின்றனர். உயர்கல்வியில் பாதிப்புக்கு தகவல் தொழில்நுட்ப படிப்பும் ஒரு காரணம். இதுபோன்று நாம் வளர்ச்சி பெற, மேலும் 50 ஆண்டுகள் தேவைப்படும். பிஎச்.டி., படித்தவர்கள் கூட தொடர்பு திறன் பெற்றிருக்கவில்லை. கல்லூரிகளில் ஐம்பது சதவீத ஆசிரியர்கள் கற்பிக்கும் திறன் பெற்றவர்களில்லை. கல்லூரிகளிலும் 50 சதவீத பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால் கடந்த 15 ஆண்டுகளில் சுயவேலை வாய்ப்பு என்பது குறைந்தே வருகிறது. பொறியியற் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். தரமற்ற கல்லூரிகளை மூட வேண்டும். ஆசிரியர் திறன், தரத்தை மேம்படுத்த வேண்டும். அக, புறத்தேர்வை நேர்மையாக மதிப்பீடு செய்ய வேண்டும். கல்வியில் தொழிற்சாலைகளின் பங்கை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்