உள்ளூர் செய்திகள்

நிர்வாக சுழலில் சிக்கித் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, தொடக்கக் கல்வித் துறையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், துறையின் நிர்வாக சிக்கல் சுழலில் சிக்கி புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த ஒரு துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மட்டும் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற முடியாமலும், பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் பெற முடியாத சூழ்நிலையும் இருக்கிறது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் ஆசிரியர்கள் அனைவரும் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். ஆசிரியர் தேர்வு வாரியம் பல கட்டங்களாக போட்டித் தேர்வுகளை நடத்தி, ஆசிரியர்களை நியமனம் செய்தது. இதில், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பள்ளிக் கல்வித் துறை, தொடக்க கல்வித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மாநகராட்சி என்று நான்கு துறைகளில் ஆசிரியர்கள் பிரித்து நியமனம் செய்யப்பட்டனர். இந்த வகையில், தொடக்க கல்வித் துறையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஆட்சியில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள், பல்வேறு துறைகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தொடக்க கல்வித் துறையிலும் ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் என்று பல பதவி உயர்வுகளை பெறுவதற்கு வழியிருக்கிறது. ஆனால், தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், எந்தவிதமான பதவி உயர்வுகளையும் பெற முடியாத சிக்கல் இருக்கிறது. அதிகபட்சமாக நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற முடியும். மற்றபடி பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர்களைப் போல் பதவி உயர்வைப் பெற முடியாது; பள்ளிக் கல்வித் துறைக்கும் செல்ல முடியாது. அதே நேரத்தில் பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களாக சேர்ந்து அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுபவர்கள், தொடக்க கல்வித் துறைக்கு வர முடியும். பணி மூப்பு கடைபிடிக்கப்படுவதிலும், துறைக்குத் துறை முரண்பாடுகள் நிலவுகின்றன. தொடக்க கல்வித் துறையைத் தவிர, மற்ற அனைத்து துறைகளிலும், மாநில அளவிலான பணி மூப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தொடக்க கல்வித் துறையில் மட்டும் இதுவரை தெளிவான விதிமுறை வகுக்கப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி, ஒன்றிய அளவில் ஆசிரியர்களின் பணி மூப்பு கடைபிடிக்கப்படுகிறது. பள்ளிகளை தரம் உயர்த்துவதிலும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும்போது, அந்த பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும். அப்படி பள்ளிகள் தரம் உயர்த்தும்போது ஆசிரியர்கள் விரும்பினால் அதே பள்ளியில் பணியைத் தொடரலாம். ஆனால், அந்த ஆசிரியர்கள் ‘ஜூனியர்’களாகவே கருதப்படுகின்றனர். பழைய சீனியாரிட்டி கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அதனால், கடைசி வரை பதவி உயர்வுக்கு வழியில்லாமல் தவிக்கின்ற நிலைமை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையை ஆசிரியர்கள் முன்வைத்து, தங்களை பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்று பல முறை வலியுறுத்தினர். தொடக்க கல்வித் துறையும் தடையில்லாச் சான்றிதழை வழங்கியது. ஆனால், இதுவரை அலகு விட்டு அலகு மாறுவதற்கான (ஒரு துறையை விட்டு வேறு துறைக்கு மாறுதல் பெறுவது) கவுன்சிலிங்கை நடத்தவில்லை. இது குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ‘ரேங்க்’ அடிப்படையில், மாநிலம் முழுவதற்கும் சேர்த்து ஒரே இடத்தில் அலகு விட்டு அலகு மாறுவதற்கான கவுன்சிலிங்கை நடத்த வேண்டும். பணி மூப்பு பாதிக்காத வகையில் இதைச் செய்ய வேண்டும். புதிய பட்டதாரி ஆசிரியர்களை பள்ளிக் கல்வித் துறையில் நியமனம் செய்யக் கூடாது. அவர்களைத் தொடக்கக் கல்வித் துறையில் நியமனம் செய்து, ஏற்கனவே அந்தத் துறையில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் செய்ய வேண்டும். ‘தொடக்க கல்வித் துறை ஆசிரியர்களிடையே நிலவும் இந்தப் பிரச்னைகளை தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்