உள்ளூர் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் சீனியாரிட்டி பட்டியல் வெளியிடாதது ஏன்?

சென்னை: பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான மூன்று நாள் சான்றிதழ் சரிபார்த்தல் பணி, செப்., 22ம் தேதி துவங்கும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 19ம் தேதி வரை சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்படவில்லை. பள்ளிக் கல்வித் துறையில் 3,528 மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் 3,340 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஓர் இடத்திற்கு ஐந்து பேர் வீதம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு சீனியாரிட்டி பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்றுள்ளது. எனினும், ஓர் இடத்திற்கு இரண்டு பேர் வீதம் சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். வரும் 22, 23, 24 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் 12 மையங்களில் சான்றிதழ் சரிபார்த்தல் நிகழ்ச்சி நடக்கின்றன. சீனியாரிட்டி பட்டியல், தேர்வு வாரிய அலுவலகத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. எல்லாரும் பார்க்கும் வகையில் இணையதளத்தில் http://trb.tn.nic.in வெளியிடப்படவில்லை. சான்றிதழ் சரிபார்த்தல் நிகழ்ச்சியில் பங்கேற்கத் தகுதியுள்ளவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவர்களுடைய பட்டியலும் இணையதளத்தில் வெளியிடவில்லை. பல பேருக்கு கடிதங்கள் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இவர்கள், சான்றிதழ் சரிபார்த்தல் முகாமில் கலந்து கொள்வது குறித்து தேர்வு வாரியம் எதுவும் அறிவிக்கவில்லை. அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ள சீனியாரிட்டி பட்டியலும் எளிதில் புரிந்துகொள்ளும்படி இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்