உள்ளூர் செய்திகள்

ஆங்கிலோ இந்திய பள்ளிகளில், கல்வி கட்டணம் உயர்வு

ஆங்கிலோ இந்திய பள்ளிகளில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கு  சம்பளத்தை உயர்த்தி வழங்குவதற்காக, அடுத்த மாதத்தில் இருந்து ஒவ்வொரு பருவ கட்டணத்தின்போதும் மாணவர்களிடம் தலா 500 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று பள்ளி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. ஏற்கனவே, கல்வி கட்டணங்கள் விஷம்போல் ஏறியுள்ள நிலையில், இந்த கூடுதல் சுமையால் பெற்றோர்கள் பெரும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகளில், அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கட்டண நிர்ணயிப்பில் ஒரு வரைமுறையே இல்லாமல் தாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற ரீதியில் தனியார் பள்ளி  நிர்வாகங்கள், செயல்பட்டு வருகின்றன. இவர்களை அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடுமையான விலைவாசி உயர்வால், பொதுமக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு இடி விழுந்துள்ளது. ஆங்கிலோ இந்தியப் பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்குவதற்காக, அடுத்த மாதத்தில் இருந்து ஒவ்வொரு பருவ கட்டணத்தின்போதும் ஒவ்வொரு மாணவரும் கூடுதலாக 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளன. காலாண்டுத் தேர்வின், கடைசி நாளான செப்., 23ம் தேதி தங்களது குழந்தைகளை அழைத்து வரச் சென்றபோது தான் பெற்றோர்களுக்கு இந்த பெரிய அதிர்ச்சி தெரிய வந்தது. தமிழகத்தில், 41 ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. சென்னை நகரிலும், பல பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஒரு ஆங்கிலோ இந்திய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டண வசூலிப்பு குறித்த ‘நோட்டீஸ்’ மாணவிகளிடம் வழங்கப்பட்டன. இது குறித்து பள்ளி ஆசிரியைகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிகமான சம்பளம் வாங்குகின்றனர். எங்களுக்கு அந்தளவிற்கு சம்பளம் கிடையாது. ஆங்கிலோ இந்திய பள்ளிகளுக்கு அரசு நிதி உதவி கிடையாது. மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை வைத்து தான் பள்ளியை நடத்துகிறோம். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி வழங்குவதற்கு பள்ளி நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. எங்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவதற்காகத் தான், ஒவ்வொரு மாணவியும் ஒவ்வொரு பருவ கட்டணத்தின்போதும் கூடுதலாக 500 ரூபாய் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். ‘பள்ளி வளர்ச்சி நிதி’ என்ற பெயரில், இந்த கட்டணம் வசூலிக்கப்படும். அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டும். இந்த கூடுதல் கட்டணத்தை அனைத்து ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளிலும் வசூலிப்பார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த பள்ளியில், முதல் வகுப்பு மாணவிக்கு கல்வி கட்டணமாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை 1800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இனிமேல் 2,300 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி நிர்வாகத்தின் இந்த திடீர் அறிவிப்பால், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில பெற்றோர்  கூறுகையில்,“ஏற்கனவே கட்டணம் அதிகமாக வசூலிக்கிறார்கள். இப்போது மேலும் 500 ரூபாய் வசூலிப்பது அநியாயம். இந்த அறிவிப்பை நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும்,” என்றனர். ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளின் இந்த நடவடிக்கையைப் பார்த்து, மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகங்களும் கூடுதல் கட்டணம் வசூலிக்க முயற்சிக்கலாம். தனியார் பள்ளிகளின் இந்த கூடுதல் கட்டண வசூலை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து, ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஆய்வாளர் அலுவலக வட்டாரம் கூறுகையில்,“எந்தப் பள்ளிக்கும் முழுமையாக அரசு நிதி உதவி செய்வது கிடையாது. ஆனால், வசூலிக்கும் கட்டணத்தை வைத்து பள்ளியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அதுபோன்ற பள்ளிகளுக்கு மட்டும் சில லட்சம் ரூபாயை உதவியாக அரசு வழங்குகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிகராக சம்பளம் வழங்குவதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்,” என்று  தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்