உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கால்பந்து பயிற்சி

திருநெல்வேலி: தமிழகத்தில் 6 மாவட்ட மாணவர்களை தேர்ந்தெடுத்து கால்பந்து விளையாட்டில் உலகத்தரத்தில் பயிற்சியளிக்க திட்டமிட்டுள்ளது. ஆசிய கால்பந்து கூட்டமைப்பு, தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கால்பந்து விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விஷன் இந்தியா என்ற திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் இந்திய பொறுப்பாளர் ரகுமான், தமிழ்நாடு கால்பந்து கழக தலைவர் கிளிட்டஸ்பாபு உள்ளிட்டவர்களுடன் அண்மையில் ஆலோசனை நடத்தினார். இதன்படி, தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் நெல்லை ஆகிய 6 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் 11 வயது நிரம்பிய மாணவர்கள் 22 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச வீரர்களாக உருவாக்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஏற்கனவே இந்த திட்டம் கேரளா, மணிப்பூர், டில்லி ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. தமிழகத்தில் இதனை அறிமுகப்படுத்தி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நெல்லையில் தமிழக கால்பந்து திருவிழா நடத்தப்படுகிறது. வரும் அக்டோபர் 3, 4 தேதிகளில் வ.உ.சி.,மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் போலீசார், பத்திரிகையாளர்கள் பங்கேற்கின்றனர். போட்டிக்கான நடுவராக உலகக் கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்ற சங்கர் பங்கேற்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் நட்சத்திரங்களும் கால்பந்து விளையாடுகிறார்கள். அவர்களுடன் நெல்லை மாணவர்கள் போட்டியிடுகின்றனர். விழாவில் அமைச்சர் மைதீன்கான், சென்னை இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை முதன்மை அரசு செயலாளர் கிறிஸ்துதாஸ்காந்தி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் பிரகாஷ், கால்பந்து கழக தலைவர் கிளிட்டஸ் பாபு ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்