உள்ளூர் செய்திகள்

வெளிமாநில ‘இம்ப்ரூவ்மென்ட்‘ தேர்வுக்கு ஒப்புதல்; ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ‘வேறு மாநிலங்களில் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதி, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு தொழில்கல்வி இயக்குனர் ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருச்செங்கோட்டில் உள்ள செங்குந்தர் பொறியியல் கல்லூரி, மணப்பாறையில் உள்ள குறிஞ்சி பொறியியல் கல்லூரி மாணவர்கள், கோவையில் உள்ள மகாராஜா பிருத்வி பொறியியல் கல்லூரி, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் கூறியிருப்பதாவது: எங்கள் கல்லூரிகளில் வெளிமாநிலங்களில், ‘இம்ப்ரூவ்மென்ட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் சிலரை சேர்த்துள்ளோம். இந்த மாணவர்களின் பட்டியல், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால்,  இயக்குனரகம் மறுத்துவிட்டது. மற்ற மாநிலங்களில் ‘இம்ப்ரூவ்மென்ட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டோம் என அரசு தரப்பில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இதனால், வெளிமாநிலங்களில் ‘இம்ப்ரூவ்மென்ட்’ தேர்வு எழுதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என கருதி நாங்கள் சேர்த்துள்ளோம். ‘இம்ப்ரூவ்மென்ட்’ மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கக் கூடாது என தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் அனுப்பிய சுற்றறிக்கை கிடைக்கும் முன், மாணவர்கள் சேர்க்கையை முடித்துவிட்டோம். எனவே, ‘இம்ப்ரூவ்மென்ட்’ மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுக்களை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். கல்லூரிகள் சார்பில் வக்கீல்கள் ஆர்.சுரேஷ் குமார், சஞ்சீவி உள்ளிட்டோர் ஆஜராகினர். நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு இல்லை என்பதால், இங்குள்ள மாணவர்களுக்கு  இம்ப்ரூவ்மென்ட் மதிப்பெண்கள் மூலம் பொறியியல் கல்லூரிகளில் நுழைவதற்கான சலுகை இல்லை. கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு இன்னும் அமலில் உள்ளது. இந்த ஆண்டுக்கான விளக்கக் குறிப்பேட்டில், ‘மற்ற மாநிலங்களில் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதியவர்களை பரிசீலிக்க மாட்டோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிபந்தனை 2007-08ம் ஆண்டின் விளக்கக் குறிப்பேட்டில் இல்லை. இத்தனை மாதங்களுக்கு பிறகு மாணவர்களை நீக்கினால், எதிர்காலம் பாதிக்கப்படும். அரசும் மாணவர்களை நீக்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த வழக்கின் தகுதிக்குள் செல்லாமல், மாணவர்கள் நலன் கருதி கீழ்கண்ட உத்தரவை பிறப்பிக்கிறேன். கடந்த (2007-08) ஆண்டில், வெளிமாநிலங்களில் ‘இம்ப்ரூவ்மென்ட்’  தேர்வு எழுதி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இனிமேல் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ‘இம்ப்ரூவ்மென்ட்’ மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கக் கூடாது. ‘இம்ப்ரூவ்மென்ட்’  அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்லைக்கழகம் வெளியிட வேண்டும். இந்த உத்தரவை ஒரு முன்னுதாரணமாக எதிர்காலத்தில் கருதக் கூடாது. இவ்வாறு நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்