மதுரை தாவரவியல் பேராசிரியர் உருவாக்கிய அபூர்வ காளான்!
சிப்பிகள் தோற்றத்தில் அடுக்கடுக்காய் வெண் குடைகளை பிடித்து கொண்டிருப்பது போல் காட்சியளிக்கும் காளான்களின் பலன்கள் குறித்து பலருக்கு தெரியவாய்ப்பில்லை. இதை பற்றி தேசிய அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மதுரை தாவரவியல் பேராசிரியர் ராஜேந்திரன் அரிய வகை காளான் ஒன்றை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக மழைக் காலங்களில் காடுகளில் காளான்கள் சிப்பிகளாக பிறப்பதை பார்த்திருப்போம். சில வகை காளான்கள் காய்ந்து போன மரங்களில் தோன்றும். சில வகை உயிருள்ள மரங்களின் வேர்களிலிருந்து தோன்றும். இந்த காளான்கள் தாவரக்கூட்டத்தை சேசர்ந்தவை. விஷக் காளான் மற்றும் உணவிற்காக பயன்படும் காளான்கள் அதிகம் காணப்படுகின்றன. இயற்கையாக தோன்றும் காளான்களில் பெரும்பாலானவை விஷத் தன்மையுடையது. சிலவகை நமக்கு மயக்கத்தை உண்டாக்கும். இந்தியாவில் முதன்முறையாக 1942ல் கோவை விவசாய பல்கலைக்கழகத்தில் சூ என்பவர் காளான் வளர்ப்பு பரிசோதனை ஆய்வை மேற்கொண்டார். 1960ல் இமாசல பிரதேசம், காஷ்மீரில் காளான் பண்ணைகள் வியாபார நோக்கில் துவங்கப்பட்டன. 1990ல் காளான் பண்ணைகள் விவசசாயத் தொழிற்சசாலையாக அங்கீகரிக்கப்பட்டன. தற்போது வியாபார நோக்கில் முட்டைக் காளான், சிப்பிக்காளான், பாலகாளான் ஆகியவை வளர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வளர்க்க ஏற்புடையது சிப்பிக் காளான். இதில் உள்ள புரதம், செறிவு மற்றும் நிறைவு பெற்ற புரதமாகும். இவ்வகை புரதத்தில் மனிதனுக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுகள் நிறைந்துள்ளன. சர்க்கரை, கொழுப்பு அல்லாத இவ்வகை காளான் இதய நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவு என்கிறார் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுவரி தாவரவியல் பேராசிரியர் ராஜேந்திரன். இவர் சமீபத்தில் ஆய்வுக்காக போரான் என்ற ரசாயனத்தை காளான் வளர்ப்பிற்கு பயன்படுத்தினார். வழக்கமாக கடல் சிப்பி வடிவில் தோன்றும் காளான்கள், மாறாக நன்கு தழைத்து கொடிபோல் தோன்றியது. இப்படி காளான்கள் தோன்றுவது அபூர்வம் என்கிறார் ராஜேந்திரன். விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கும் காளான் வளர்ப்பு குறித்து இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். காளான் பண்ணை தொழில் தொடங்கவும் ஆலோசனை வழங்குகிறார். மேலும் விபரங்கள் அறிய 94439 98480 என்ற எண்ணில் ஹலோ சொல்லலாம்.