உள்ளூர் செய்திகள்

முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப உறுதி

திருவள்ளூர்: ‘காலியாக உள்ள முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மூன்று வாரத்திற்குள் நிரப்பப்படும்’ என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கலந்துகொண்ட கலந்தாய்வுக்கூட்டம், அக். 31ம் தேதி திருவள்ளூர் அருகே பாண்டூர் பிரியதர்ஷணி பல் மருத்துவக் கல்லூரியில் நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு பேசுகையில்,‘நாட்டில், கல்வி வளர்ச்சியில் தமிழகம் தான் முதல் இடத்தை பெற்றுள்ளது. இது  இரண்டரை ஆண்டு தி.மு.க., ஆட்சியின் சாதனை. தமிழகம் கல்வி வளர்ச்சியில், சிறப்பாக முன்னேறி வருகிறது’ என்றார். ஆய்வுக்கூட்டத்திற்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் அறிவித்த கல்வி சலுகைகள் வழங்கப்படுகிறதா, அவைகள் மாணவர்களிடம் சென்றடைந்துள்ளதா உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகள், அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தேர்வு வாரியம் மூலமாக மூன்று வார காலத்திற்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய ஆசிரியர் பணியிடங்கள், பள்ளி கட்டடங்கள், ஆய்வகங்கள் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும்போது பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி நிரப்பப்படும். உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளி கட்டடங்கள் நபார்டு வங்கி மூலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க மற்றும் ஆரம்பக் கல்வி நிலையங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் குடிநீர் வசதிக்காக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கழிவறைகள் கட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இடை நிலை ஆசிரியர் பணி இட மாறுதல் குறித்து தமிழக அரசு ஏற்கனவே சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி தான் செயல்படவேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை செயலர் குற்றாலிங்கம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் வெங்கடேசன்,பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள் சாமி, தொடக்கக்கல்வி இயக்குனர் தேவராஜன்,மெட்ரிக் கல்வி இயக்குனர் மணி, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, பிற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்