தமிழ் பள்ளிகள் தேசியமயமாக்கப்படும்: மலேசிய துணை பிரதமர்
கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழ் பள்ளிகள் படிப்படியாக தேசிய மயமாக்கப்படும் என, அந்நாட்டு துணைப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் நடந்த தீபாவளி விழாவில், மலேசிய துணைப் பிரதமர் நஜிப் ரசாக் கலந்து கொண்டார். மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலுவும் இந்த விழாவில் பங்கேற்றார். ‘மலேசியாவில் பிறந்த 30 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினருக்கு அடையாள அட்டையோ, பிறப்பு சான்றிதழோ வழங்கப்படவில்லை. இவற்றை வழங்க துணைப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சாமிவேலு, துணை பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். இவ்விழாவில் நஜிப் பேசியதாவது:டத்தோ சாமிவேலுவின் கோரிக்கை ஏற்கப்படும். மலேசிய வாழ் இந்தியர்களுக்கு சம உரிமை அளிப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சரவையின் சிறப்புக் குழு கவனிக்கும். மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் படிப்படியாக தேசிய மயமாக்கப்படும். இதன் மூலம் இந்த பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளும், சலுகைகளும் கிடைக்கும். இந்திய சிறுதொழில் முதலீட்டாளர்களுக்கு கடனுதவியும் அளிக்கப்படும். இவ்வாறு நஜிப் பேசினார்.