நெல்லை பல்கலை தொடர்பியல் துறைக்கு கூடுதல் கட்டடம்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறை-மாஸ் கம்யூனிகேஷன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகிறது. இத்துறைக்கு, தினமலர் ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தி, தன் சொந்த செலவில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில், 2006ல், புதிய கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளார்.அந்த வளாகத்தில், தற்போது, தொடர்பியல் துறை வகுப்பு மீடியா ஸ்டூடியோ, ஞானவாணி பண்பலை ரேடியோ இயங்கி வருகிறது. இங்கு, எம்.ஏ., தொடர்பியல், இளங்கலை பாடப்பிரிவுகளில் சென்னை, கோவை உள்ளிட்ட, வெளிமாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பயில்கின்றனர். இதனால், வகுப்பறைகள் பற்றாக்குறை காரணமாக, புதிய கட்டடம் கட்டப்படுகிறது. இதில், தினமலர் ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தி பங்களிப்பு, 25 லட்சம் ரூபாய்; பல்கலையின் நிதி, 25 லட்சம் ரூபாய் என, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம் அமைகிறது. அதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. தொடர்பியல் துறை கட்டடத்தை ஒட்டி, மேற்கு பகுதியில் கூடுதல் கட்டடம் அமைகிறது. இதில், தரைத்தளத்தில் வகுப்பறைகள், விசாலமான நூலகம், உணவுக்கூடம்,முதல்தளத்தில், சினிமா திரையரங்கம் அமைகின்றன. பூமி பூஜைக்கு, பல்கலை துணைவேந்தர் ஏ.கே.குமரகுரு தலைமை வகித்தார். தினமலர் ஆசிரியர், இரா. கிருஷ்ணமூர்த்தி அடிக்கல் நாட்டினார். பல்கலை பதிவாளர் கோவிந்தராஜன், சிண்டிகேட் உறுப்பினர்கள், பேராசிரியர்கள் குமரேசன், அழகேசன், ஜெய்சங்கர் மற்றும் டீன்கள் பதினெட்டாம்படியான், மரியஜான், பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் பங்கேற்றனர்.