‘பிட்’ அடிக்கும் மாணவர்களை தண்டிக்க வேண்டும்: சுப்ரீம்கோர்ட்
டில்லியிலுள்ள டாக்டர் அம்பேத்கர் இன்ஸ்ட்டியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் படித்த வைபவ சிங் சவுகான், கடந்த 2004-05ம் ஆண்டில் மூன்றாமாண்டு தேர்வு எழுதினார் . தேர்வு எழுதிக்கொண்டு இருந்த சவுகான் ‘பிட்’ வைத்து காப்பி அடித்தாக கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் ஓராண்டு காலத்திற்கு படிப்பை தொடர தகுதி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் சவுகான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தனிநீதிபதி விசாரணைக்கு உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. தனி நீதிபதி முன்பு ஆஜரான சவுகான், ‘தேர்வின் போது தான் ‘பிட்’ வைத்து இருந்ததாகவும், படித்ததை நினைவுபடுத்தி பார்ப்பதற்காக வைத்து இருந்த குறிப்புதான் அது. அவற்றை பார்த்து தேர்வு எழுதவில்லை. என்னை மன்னிக்க வேண்டும்’ என கூறினார். சவுகான் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில்,‘ என் கட்சிக்காரர் வைத்திருந்த சிறு குறிப்பு பேப்பரை பயன்படுத்திதான் தேர்வு எழுதினார் என்பதற்கு எவ்வித ஆதாரம் இல்லை. குறிப்பு எடுத்த பேப்பரை தவறதலாக கொண்டு வந்துவிட்டார்’ என குறிப்பிட்டார். இதை ஏற்ற தனிநீதிபதி, தனது பள்ளிக்காலத்தில், படித்ததை நினைவில் வைத்து கொள்ள இதுபோல் சிறு பேப்பரில் எழுதிவைத்து, தேர்வு முன்பு திருப்பி பார்த்துள்ளதாகவும். அதை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தியதில்லை என்று குறிப்பிட்டார். தனி நீதிபதி தனது தீர்ப்பில், சவுகான் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார். எனவே மன்னித்து விடுவித்துவிடலாம் ’ என குறிப்பிட்டு இருந்தார். இதை ஏற்று டில்லி உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், சவுகானுக்கு மன்னிப்பு வழங்கி விடுவித்தது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த மனுவை அல்தாமஸ் கபீர் மற்றும் மார்கண்டேய கட்ஜு விசாரித்தனர். கல்லூரியின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் டில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும், கல்வி தரத்தை தக்கவைக்கவும் கடும் ஒழுங்கு நடவடிக்கை தேவை. சிறப்பான கல்வி தரத்தை தக்கவைப்பதற்கு எந்த வகையிலும் முறைகேடுகளை அனுமதிக்க கூடாது. தேர்வின்போது எவ்வித முறைகேடுகளும் ஏற்படாமல் இருக்க கல்வி நிறுவனங்கள் இரும்புக் கரம் கொண்டு செயல்பட வேண்டும். தேர்வுகளின் போது மாணவர்கள் எவ்வித முறைகேடில் ஈடுபடுவதை அனுமதிக்க கூடாது. தேர்வு எழுதுபவர் தேர்வுக்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். தன்னுடன் குறிப்புகள் அடங்கிய துண்டு சீட்டுகளை கொண்டு வருவது தவறான நடவடிக்கையாகும். அவ்வாறு கொண்டு வரும் பேப்பரை தேர்வு கூடத்திற்கு வெளியே விட்டு விட்டு வர வேண்டும். தேர்வின்போது அவரிடம் இருந்து, துண்டு பேப்பர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால் அது முறைகேடாகத்தான் கருதப்படும். அவர் அதை பார்த்து தேர்வு எழுதினாரா இல்லையா என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. சட்டத்திற்கு புறம்பாக ‘பிட்’ பேப்பரை வைத்து இருந்ததே தவறுதான். எனவே சம்மந்தப்பட்ட மாணவரை கல்லூரி நிர்வாகம் தகுதி நீக்கம் செய்தது சரிதான். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.