உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கல்லூரி மாணவர்கள்

திருப்பூர்: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை கல்லூரி மாணவர்கள் நேற்று முற்றுகையிட்டனர். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்; ஐ.நா., சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்; பொது வாக்கெடுப்பு நடத்தி, தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த 80க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர், காமராஜ் ரோட்டில் நின்று கோஷமிட்டனர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், மாணவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். அவர்களிடம், "கலெக்டரை சந்திக்கும் வரை கலெக்டர் அலுவலகத்தை விட்டு நகர மாட்டோம்" என்று கூறிய மாணவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில், காலை 11.00 முதல் மதியம் 1.30 மணி வரை காத்திருந்தனர்; பகல் 1.30 மணிக்கு, கலெக்டர் கோவிந்தராஜ், மாணவர்களை அழைத்து பேச்சு நடத்தினார். தங்களது கோரிக்கைகளை தெரிவித்ததுடன், நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின் போது, கலெக்டர் நேரில் வந்து பேச்சு நடத்தாததற்கு மாணவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.கலெக்டர் பதிலளிக்கையில், "மாணவர்களின் போராட்ட நிலவரம் அனைத்தும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பணி இருந்ததால், நேரில் வர இயலவில்லை. அதற்காக, ஆர்.டி.ஓ., மற்றும் எஸ்.பி., அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்கள் வலியுறுத்தும் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மாவட்ட நிர்வாக பணிகளுக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்றார். அதன்பின், சமாதானமடைந்த மாணவர்கள், கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்