உள்ளூர் செய்திகள்

கேள்வித்தாள் அச்சிட மறந்த பல்கலை: மாணவர்கள் ஏமாற்றம்

மும்பை: தேர்வுக்கான வினாத்தாள்களை அச்சடிக்காமல் பல்கலைக்கழகம் மறந்து விட்டதால், தேர்வு தேதி மாற்றப்பட்டது. இதனால், தேர்வு எழுத வந்த மாணவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர். மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில், எம்.ஏ., வரலாறு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, நவ., 3ம் தேதி தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாணவர்கள் பாடங்களை படித்துவிட்டு, அன்றைய தினம் தேர்வு மையங்களுக்கு சென்றனர். மும்பை, தானே மற்றும் ரத்னகிரியில் உள்ள 19 மையங்களில் தேர்வு நடக்க விருந்தது. மொத்தம் 90 மாணவர்கள் தேர்வு எழுதச் சென்றனர். அப்போது, தேர்வை கண்காணிக்கும் அதிகாரிகள் மாணவர்களுக்கு வழங்குவதற்கான வினாத்தாள்களை தேடியபோது, அது கிடைக்கவில்லை. அங்கும் இங்கும் தேடிய பின்னர், பல்கலைக் கழகத்தில் இருந்தே வினாத்தாள்கள் வரவில்லை என்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து, பல்கலைக் கழகத்தை தொடர்பு கொண்டு பேசினர். அப்போதுதான், அன்று நடக்கவிருந்த தேர்வுக்கான கேள்வித்தாள்களே அச்சிடப்படவில்லை என்பதை பல்கலை நிர்வாகத்தினர் கண்டுபிடித்தனர். பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான பேராசிரியர் விலாஸ் ஷிண்டேயை தொடர்பு கொண்ட போது, ‘சில குழப்பங்கள் காரணமாக இன்றைய தேர்வுக்கான வினாத்தாள்கள் அச்சிடப்படவில்லை. வினாத்தாள்கள் கிடைக்கவில்லை என்ற விவரத்தை தேர்வு மையங்களில் இருந்து தகவல் வந்த பின், 10.30 மணிக்குத்தான் அறிந்து கொண்டோம். அதன்பின்னரே, இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். தேர்வும் நவம்பர் 8ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது’ என்றார். மும்பை பல்கலையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சாதாயி கல்லூரியின் முதல்வர் டாக்டர் கவிதா ரீகி கூறுகையில், ‘எம்.ஏ., பட்டப்படிப்பில் இரண்டு சிறப்பு பாடப்பிரிவுகளுக்கான வினாத்தாள்கள் எங்களுக்கு வந்து சேரவில்லை. உடன் பல்கலைக் கழகத்தை தொடர்பு கொண்டு பேசினோம். அதன்பின்னர்தான், கேள்வித்தாள்களே அச்சிடப்படவில்லை என்பதை அறிந்தோம். சில நாட்களுக்கு முன், எங்களுக்கு மொத்தமாக வினாத்தாள்கள் வந்தன. தேர்வு துவங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர்தான் நாங்கள் வினாத்தாள்களை பிரித்துப் பார்க்க முடியும் என்பதால், நாங்கள் அவற்றை சரிபார்க்க இயலவில்லை. நடக்கவிருந்தது சிறப்பு பாடப்பிரிவு என்பதால், அதற்குரிய கேள்வித்தாள்கள் தான் வரவில்லை’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்