உள்ளூர் செய்திகள்

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வருகைப் பதிவு!

தமிழகத்தில் உள்ள 343 பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆன்லைன் அட்டென்டென்ஸ் கட்டாயப பதிவு முறையை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிமுகப்படுத்தியது. இதன்படி, அந்தந்த பாலிடெக்னிக்குகளில் படிக்கும் மாணவர்களின் வருகைப் பதிவு விவரங்கலை பாலிடெக்னிக் முதல்வர்கள் ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககதிற்கு அனுப்பி வைக்க வேண்டும். நீண்ட விடுமுறை எடுக்கும் மாணவர்கள், மருத்துவ சான்றிதழ்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், போதிய வருகைப் பதிவு இல்லாத மாணவர்கள் போலியாக மருத்துவ சான்றிதழ்களைக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் தடுக்கப்படுகிறது. 75 சதவீத வருகைப் பதிவு இருக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு முன்னதாகவே தொழில்நுட்பக் கல்வித் துறை தெரிவித்துவிட்டது. வருகைப் பதிவுக்கான ஆன்லைன் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பாலிடெக்னிக்குகளில் மாணவர்கள் வருகையின்மை குறைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த முறை மூலம் மாணவர்கள் தங்களது வருகைப் பதிவு விவரங்களை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த செமஸ்டரில் மாணவர் வருகைப் பதிவு குறைவு காரணமாக 5 ஆயிரம் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் மறுக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சிலர் நீதிமன்றங்களுக்குச் சென்றார்கள். தற்போது ஆன்லைன் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர் வருகைப் பதிவு ஒழுங்குபடுத்தப்பட்டதை அடுத்து, இந்த செமஸ்டரில் 3 ஆயிரத்து 800 மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் மறுக்கப்பட்டபோதும்கூட அதுகுறித்து எந்த எதிர்ப்பும் எழவில்லை என்கிறார்கள் தொழில்நுட்பக் கல்வித்துறை அதிகாரிகள். விடுமுறை நாட்கள், பணிநாட்கள் போன்றவற்றில் பாலிடெக்னிக்குகளுக்கு எழும் பிரச்சினைகளைச் சரி செய்யவும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் எத்தனை மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும் என்பது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதை நிறைவு செய்யாமல் இருக்கும் பாலிடெக்னிக்குகள் வார இறுதி நாட்களில் அதை நிறைவு செய்யும் வகையில் வகுப்புகளை நடத்தி பாடங்களை முடிக்க வேண்டும் என்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை பாலிடெக்னிக் முதல்வர்களை வலியுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்