உள்ளூர் செய்திகள்

புத்தமத தத்துவக் கல்விக்காக உருவாகியுள்ள நாளந்தா பல்கலைக்கழகம்!

பீகாரின் தலைநகரான பாட்னாவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில், பழைய நாளந்தா பல்கலைக்கழகத்தின் இடிபாடுகள் உள்ள இடம் அருகே இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 40 சதவீத மாணவர்கள் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பாலி மொழியில் சான்றிதழ், டிப்ளமோ, பி.ஏ., எம்.ஏ., படிப்புகளைப் படிக்கலாம். தத்துவம், புராதன வரலாறு மற்றும் தொல்லியல், புத்தவியல், சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம், திபெத்தியன் ஸ்டடீஸ், புத்தமதமும் மொழிகளும் ஆகியவற்றில் எம்.ஏ. படிக்கலாம். திபெத்தியன் ஸ்டடீஸ் துறையில் தொடக்கக் கட்ட படிப்பையும் படிக்க இங்கு வாய்ப்புகள் உள்ளது. புத்த மதம் தொடர்பான படிப்புகளை நடத்தும் முக்கியக் கல்வி நிறுவனம் இது. இங்கு படிக்கச் சேரும் திறமை வாய்ந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. நாளந்தா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் பற்றி  துணைவேந்தர் ரவீந்திர பந்த் அளித்துள்ள பேட்டி: எத்தனை மாணவர்கள் உங்களது பல்கலைக்கழகத்தில் படிக்கப் பதிவு செய்துள்ளனர்? தற்போது 340 மாணவர்கள் படிக்கிறார்கள். 60 சதவீத மாணவர்கள் இந்தியர்கள். வியட்நாடம், மியான்மர், தாய்லாந்து, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து 40 சதவீத மாணவர்கள் படிக்கிறார்கள். பாலி, சம்ஸ்கிருதம், புத்த தத்துவம் போன்ற துறைகளில் படிப்புகளைத் தருகிறோம். பழமை வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகம் இருந்த இடத்தின் அருகே 12 ஏக்கர் நிலத்தில் இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த துறவி, சீனம், சம்ஸ்கிருதம் ஆகியவற்றைக் கற்றுத் தருகிறார். புத்த மதம் சம்பந்தமான படிப்புகளையும் பாலி மொழியையும் மியான்மரிலிருந்து வந்துள்ள அறிஞர்கள், மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறார்கள். நாளந்தா, ஏன் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மட்டுமே இருக்கிறது? இந்தியவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தின் யோசனைப்படி, நாளந்தா பல்கலைக்கழகத்தின் பெருமையை நிலைநிறுத்தும் வகையில் நவ நாளந்தா மகாவிஹாராவை 1951ல் பிகார் அரசு ஏற்படுத்தியது. 80களில் இந்தக் கல்வி நிறுவனம் நலிவடைந்த நிலையில் இருந்தது. 1994ல் மத்திய கலாசாரத்துறை இந்தக் கல்வி நிலையத்தை எடுத்துக் கொண்டு, 2007ல் இதை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக்கியது. இங்கு அபூர்வமான கையெழுத்துபடிகள் இருக்கின்றனவா? இங்கு ஓலைச் சுவடிகள் உள்பட மதிப்பு வாய்ந்த கையெழுத்துப் பிரதிகள் இருக்கின்றன. 1753ல் சீனமொழியில் எழுதப்பட்ட புத்தமத கையெழுத்துப் பிரதிகளை, அன்றைய சீன பிரதமர் சூயென்லாய், நேருவிடம் 1957ல் அளித்தார். அந்த கையெழுத்துப் பிரதிகள் பாட்னா மியூசியத்தில் உள்ளது. அந்தக் கையெழுத்துப் பிரதிகள் நாளந்தாவிற்கு கொண்டு வரப்பட உள்ளன. யுவான் சுவாங் நினைவு அரங்கம் அமைப்பது தொடர்பாக உங்களது திட்டம் என்ன? புத்தமதக் கல்வி மூன்று அம்சங்களைக் கொண்டது - தத்துவம், நடைமுறை, அனுபவம். இதனை செயல்படுத்தும் வகையில் 64 ஏக்கரில் நினைவு அரங்கம் அமைக்கப்படும். பீகார் அரசு மேலும் 50 ஏக்கர் நிலத்தை அளிக்க உள்ளது. அனைத்துக் கலைகளுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் ஒரு கலாசார கிராமத்தை உருவாக்க இருக்கிறோம். முன்பு இங்கு நெபுரா என்ற நெசவாளர் கிராமம் இருந்தது. யு.என்.டி.பி., அமைப்பு இதனை புத்தாக்கம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முற்காலத்தில் இருந்த நாளந்தா பல்கலைக்கழகத்தில் புத்த தத்துவம் தவிர வேறு துறைகளும் கற்பிக்கப்பட்டனவே... தற்போது, புத்த மதத்தைத் தாண்டி வேறு துறைகளில் விரிவாக்கம் செய்யும் திட்டம் ஏதும் இல்லை. தற்போது பாலி-இந்தி அகராதியை உருவாக்கி வருகிறோம். எங்களது முழு கவனமும் கற்பித்தல், ஆராய்ச்சி, வெளியீடு ஆகியவற்றில்தான் உள்ளது. அறிவியலும் தத்துவமும் குறித்து ஆண்டுதோறும் பயிலரங்குகளை நடத்துகிறோம். இந்த ஆண்டில் நடத்தப்பட்ட பயிலரங்கில் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் கல்வி நிலைய பேராசிரியர்களும் டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் கல்வி நிலையத்திலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். இலங்கையிலிருந்து புத்தமத தத்துவ அறிஞர்களும் வந்திருந்தனர். இந்தப் பயிலரங்கில் அணுவைப் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் குறித்த விவரங்களுக்கு: http://navanalandamahavihara.org


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்