மழுங்கிவிடவில்லை வாசிக்கும் பழக்கம்: புத்தக விற்பனை அதிகரிப்பு
திருவனந்தபுரம்: தொலைக்காட்சி மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்களையும் கடந்து, புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, டி.சி., புக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரவி டீசி, கூறியதாவது:கேரளாவில், மலையாள புத்தகங்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மாநிலத்தின், பல இடங்களிலும் இதே நிலை தொடருவது, எங்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது. தொலைக்காட்சி, சினிமா போன்ற ஊடகங்கள் பெருகிவிட்டதால், வாசகர்களிடையே படிக்கின்ற பழக்கம் குறைந்துவிட்டதாக கருதப்பட்டது. ஆனால், நல்ல புத்தகங்களுக்கு, வாசகர்களிடையே வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இளைய தலைமுறையினரும், புத்தகங்களை விரும்பி வாசித்து வருகிறார்கள். எங்கள் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட புத்தக கண்காட்சியில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கூடுதலாக, 50 சதவீத விற்பனை நடந்துள்ளது. இக்கண்காட்சியில், மலையாளம் மற்றும் ஆங்கில மொழியில், கலை, இலக்கியம், அறிவியல், என, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற் றன. இதில், நாவல்கள், குழந்தைகள் புத்தகங்கள் போன்றவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. கிராமப்புறங்களிலும், புத்தகங்களை விரும்பி வாசிப்பவர்களது எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புத்தக கடைகளை நோக்கி வாடிக்கையாளர்கள் செல்வதற்கு பதிலாக, அவர்களது இருப்பிடத்திற்கே புத்தகங்களை கொண்டு சென்றதுதான், இந்த மாற்றத்துக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.