பி.பார்ம் தேர்வுகள் இன்று துவக்கம்: மாணவர்களுக்கு கட்டுப்பாடு
தமிழகத்தில், 40 பார்மசி கல்லூரிகள் உள்ளன. இதில், சென்னை மற்றும் மதுரையில், இரண்டு அரசு பார்மசி கல்லூரிகளும், 38 தனியார் பார்மசி கல்லூரிகளும் உள்ளன. இரண்டாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு, இன்றும் (ஆக., 1ம் தேதி), முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, 14ம் தேதியும், தேர்வுகள் துவங்க உள்ளன. வரும், 29ம் தேதி வரை நடக்க உள்ள தேர்வுகளை, 7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர். இந்தாண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, "தேர்வு எழுதுவோர், சாக்ஸ், "ஷூ" அணிய கூடாது; ஓவர்கோட் மற்றும் முழுக்கை சட்டை அணியக் கூடாது; மாணவியர் தலையை இறுக்கமாக வாரியிருக்க வேண்டும்; "மெட்டல் டிடெக்டர்" சோதனைக்கு பின், இஸ்லாமிய மாணவியர் மட்டும், பர்தா அணிந்து கொள்ளலாம்" என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகள் பார்மசி மாணவ, மாணவியரிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.