சமூக சேவை செய்த இளைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல்: சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்கள், தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆக., 5 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ல் சுவாமி விவோகனந்தர் பிறந்தநாள் தேசிய இளைஞர் விழாவாக கொண்டாடப்படுகிறது. சமூக மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கு, தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு தேசிய இளைஞர்கள் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க வயது 13 முதல் 35 க்குள் இருக்கவேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாரம் பெறப்படாமல் தொண்டு செய்திருக்கவேண்டும். அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. சங்க பதிவு சட்டத்தின்படி தொண்டு நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருக்கவேணடும். எந்தவித லாபநோக்கத்துடனும் தொண்டு பணிகள் ஆற்றியிருக்க கூடாது. சமுதாய நலப்பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய போட்டோ, செய்திக்குறிப்பு மற்றும் இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்கள் இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து வரும் ஆக., 5 க்குள் விண்ணப்பிக்கலாம்.