கல்வி உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம்: பா.ஜ.க., குற்றச்சாட்டு
அன்னூர்: "கல்வி உதவி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது" என தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். "இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்" என்று கோரி, மாவட்ட பா. ஜ., சார்பில், அன்னூரில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையை பெற, இந்துக்களுக்கு ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் எனும் நிபந்தனையும் உள்ளது. ஆனால் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், இரண்டரை லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தாலும் உதவித்தொகை பெறலாம். முஸ்லிம், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் எனும் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஓட்டுக்காக சிறுபான்மையினரை காங்கிரஸ் தாஜா செய்கிறது. இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.