இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை: தேர்வுகள் ஒத்தி வைப்பு
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 26ம் தேதி நாகை அருகே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 25ம் தேதி முதலே தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பலத்த மழை பெய்ததால், இந்த மாவட்டங்களில் 26ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கரையைக் கடந்தாலும் மழை நீடிக்கும் என்பதால், சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நவ. 27ம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப தேர்வு தள்ளிவைப்பு: தொடர் மழை காரணமாக தொழில்நுட்பத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:விவசாயம், கைத்தறி நெசவு, அச்சுக்கலை மற்றும் ஓவியம் ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் 26ம் தேதி முதல் நடைபெற இருந்தன. 28ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள், வேறு தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் முறையே டிசம்பர் 10, 11, 12ம் தேதிகளில், ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு மையங்களில், குறிப்பிட்ட நேரங்களில் நடைபெறும். விவசாயப் பாட செயல் முறைத் தேர்வுகள், எழுத் துத் தேர்வுக்குப் பின் நடைபெறும். இதர தேர்வுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள் ஒத்தி வைப்பு: கன மழை காரணாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் ( பொறுப்பு ) அமலராஸ் விடுத்த அறிக்கை:தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நவ. 26ம் தேதி முதல் 29ம் தேதி வரையில் நடைபெற வேண்டிய தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் நடக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.