கடின பாடங்களை எளிதாக கற்றுக் கொடுப்பது எப்படி?
கோவை: படைப்பாற்றல் கல்வி பற்றி ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான இரண்டு நாள் வலுவூட்டல் பயிற்சி, சித்தாபுதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் துவங்கியது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் இப்பயிற்சி, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடக்கிறது. சென்னையில் இதற்கென பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் காளியப்பன் கூறுகையில், “6,7,8 வகுப்பு மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த ஏ.எல்.எம். பயிற்சி உதவுகிறது. வகுப்பில் பாடம் துவங்குவதற்கு முன் அப்பாடம் பற்றி 10 நிமிடம் பேசி, மாணவர்களின் கவனத்தை பாடத்துக்குள் இழுத்துச் செல்வது எப்படி என பயிற்சி அளிக்கப்படுகிறது. அறிவியல் பாடமாக இருந்தால் அறிவியல் உபகரணங்களின் உதவியுடன் 10 நிமிடம் செயல் விளக்கம் அளிக்க வேண்டும். புத்தகத்தை மாணவர்கள் படிக்கும் போது கடினமான, புதிய வார்த்தைகளை அடிக்கோடிட்டு படிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் வாயிலாக மாணவர்களின் கவனத்தை முழுமையாக பாடத்தில் பதிய வைக்க முடியும். அதன்பின் படித்த பாடம் பற்றி கலந்துரையாடல் நடத்தப்படும். அப்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு ஆசிரியர் விளக்கம் அளிப்பார். இரண்டாவது கட்டமாக, மாணவர்கள் தங்களுக்கு புரிந்ததை ‘மைண்ட் மேப்’ ஆக வரைய வேண்டும். படித்ததை காட்சிகளாக மாற்றும் இந்த முறையால், கடின பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும்,” என்றார். இப்பயிற்சி இன்று நிறைவு பெறுகிறது.