நவீன அறிவியலின் பயன் கிராமங்களை சென்றடைய வேண்டும்
சென்னை: "அறிவியலாளர்கள் - சமூகம் இடையே உள்ள, புரிந்துணர்வு இடைவெளியை இணைக்க, தனிக்கவனம் செலுத்த வேண்டும்; நவீன அறிவியலின் பயன், கிராமங்களைச் சென்றடைய வேண்டும்" என, கால்நடை மருத்துவ பட்டமளிப்பு விழாவில், எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், 16வது பட்டமளிப்பு விழா, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடந்தது. கவர்னர் ரோசய்யா தலைமை வகித்து, 246 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். இதில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியதாவது: பால் உற்பத்தி குறைவாக உள்ள பகுதிகளில், பசுமைப் புரட்சியை நீட்டிக்கும் வாய்ப்பு, இன்னமும் உள்ளது. உயர் கலப்பின தீவனப் பயிர்களை அதிகம் உற்பத்தி செய்து, ஊட்டச்சத்து மிக்க பசுந்தீவனங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். இளைய தலைமுறையினர், பண்ணை விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பது, வேளாண் துறையில் முக்கிய பிரச்னையாக உள்ளது. பண்ணை நிலங்கள், வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தும் நிலை உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அரசு கொண்டு வந்த, பண்ணை பட்டதாரிகள் வேளாண் சிகிச்சை, வேளாண் வணிக மையங்கள் துவங்கும் திட்டம், படித்த, ஆர்வமுள்ள இளைஞர்களைக் கவரவில்லை. திறன் வாய்ந்த வேளாண் பட்டதாரிகள் ஒன்றிணைந்து, ஒவ்வொரு வட்டத்திலும் வேளாண் சிகிச்சை, வணிக மையங்களைத் துவங்க வேண்டும். மேலும், அறிவியலுக்கும், சமூகத்திற்குமான தொடர்பை வலுப்படுத்த வேண்டும்; புரிந்துணர்வு இடைவெளியை இணைக்க, தனிக்கவனம் செலுத்த வேண்டும். நவீன அறிவியலின் பயன், கிராமப்புறங்களையும் சென்றடைய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சின்னையா, பல்கலை துணைவேந்தர் பிரபாகரன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில் பேசிய, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சின்னையா, "இந்த கல்வியாண்டு முதல், இரண்டு புதிய விருதுகள் வழங்கப்படும்" என அறிவித்தார். கால்நடை உற்பத்தி பாடத்தின் சிறந்த முனைவர் பட்டம் பெறும் மாணவருக்கு, 2 லட்சம் ரூபாய் வெகுமதியுடன் கூடிய, வேந்தர் டாக்டர் ரோசையா விருது. திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இளநிலை கால்நடை மருத்துவத்தில் முதலிடம் பெறும் மாணவருக்கு, 1 லட்சம் ரூபாயுடன், முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஞானப்பிரகாசம் அறக்கட்டளை விருது. இந்த இரண்டு விருதுகள், இந்த கல்வியாண்டு முதல் வழங்கப்பட உள்ளன. 24 பதக்கங்களை அள்ளிய மாணவர் : பட்டமளிப்பு விழாவில், மாணவர்களின் கல்வித் திறமைக்காக, 111 பதக்கங்கள் வழங்கப்பட்டன. பி.வி.எஸ்.சி., படித்து பட்டம் பெற்ற, ராஜேஷ்குமார் யோகி, 24 தங்கப் பதக்கங்கள் பெற்று சாதித்தார். அவர் கூறியதாவது: ராஜஸ்தானில், பாட்டன் என்ற கிராமத்தில், என் அப்பா ஜக்மோகன், பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். பி.வி.எஸ்.சி., படிக்க இடம் பெறுவதே கஷ்டமாக இருந்தது. கடைசி நேரத்தில் இடம் கிடைத்தது. படிப்பில் ஆழ்ந்து கவனம் செலுத்தியதால், இத்தனை தங்கப் பதக்கங்கள் கிடைத்து உள்ளன; மகிழ்ச்சியாக உள்ளது. கால்நடை வளர்ப்பு, கால்நடை மருத்துவத்தில், நவீன யுக்திகள் வந்தும், கால்நடை வளர்ப்புத் தொழில் மேம்படவில்லை. சமூகத்திற்கு, ஏதாவது நான் செய்ய வேண்டும். ராஜஸ்தானில், டாக்டர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன். நிச்சயம், நான் பெற்ற கல்வியை, கிராம மேம்பாட்டிற்கு பயன்படுத்துவேன். இவ்வாறு, அவர் கூறினார்.