உள்ளூர் செய்திகள்

விளையாட்டு மைதானங்களில் கட்டணம் உயர்வு: மாணவர்கள் தவிப்பு

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி.,) கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானங்களில், விளையாட்டுக்கான கட்டணங்கள் நூறுசதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் செலுத்த முடியாமல், பெற்றோர் பரிதவிக்கின்றனர். எல்லா மாவட்டங்களிலும், அனைத்து விளையாட்டுகளும் நடத்தப்படுவதில்லை. இடத்தைப் பொறுத்து, வசதியைப் பொறுத்து விளையாட்டுகள் உள்ளன. மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை, விழுப்புரம், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு மாவட்டங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. பயிற்சி பெற மாதக் கட்டணம் ரூ.500 ஆக இருந்தது, தற்போது ரூ.1000ஆகிவிட்டது. இறகுபந்து பயிற்சி கட்டணம் ரூ.250லிருந்து ரூ.600ஆகவும், கிரிக்கெட் பயிற்சி கட்டணம் ரூ.500லிருந்து ரூ.1000ஆகவும் அதிகரித்துள்ளது. டென்னிஸ் காலாண்டு கட்டணம் ரூ.600லிருந்து ரூ.1200ஆகவும், டேபிள் டென்னிஸ் ரூ.300 லிருந்து ரூ.600ஆகவும் அதிகரித்துள்ளது. முன் அறிவிப்பின்றி அனைத்து மாவட்டங்களிலும் இந்த கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். தென்மாவட்டங்களைப் பொறுத்தவரை, பணம் செலுத்தி பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்க விரும்பும் பெற்றோர் குறைவு. பிள்ளைகளின் விருப்பத்திற்காக கஷ்டப்பட்டு, மாதக்கட்டணம் செலுத்தும் பெற்றோர், கூடுதல் கட்டணத்தால் அதிருப்தி அடைந்துள்ளனர். பயிற்சி கட்டண வருவாய், எஸ்.டி.ஏ.டி., அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது. நீச்சல் குளத்திற்கு மட்டும் 25 சதவீதத் தொகை, மாவட்ட அலுவலகங்களுக்கு தருகிறது. இந்தத் தொகையில் தான், குளத்தின் பராமரிப்புப் பணிகளை செய்ய வேண்டும். குளோரின் கட்டணம் உயர்ந்துள்ளதால், கட்டண உயர்வு தேவையானது தான் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பெற்றோர்களுக்கு கூடுதல் மாதக் கட்டணம் பெரும் சுமையாக உள்ளதால், எஸ்.டி.ஏ.டி., உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்